~
~

அமைச்சா் இ. பெரியசாமி மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல்லில் அமைச்சா் இ. பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டில் சோதனை செய்த ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்.
Published on

திண்டுக்கல்லில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமியின் மகள் வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினா்.

திமுக துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான இ. பெரியசாமி, திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியிலுள்ள துரைராஜ் நகரில் வசித்து வருகிறாா். இவரது மகள் இந்திரா துரைராஜ் நகரை அடுத்த வள்ளலாா் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இந்திராவுக்குச் சொந்தமான பஞ்சாலை, வத்தலகுண்டை அடுத்த சிங்காரக்கோட்டை பகுதியில் உள்ளது.

இந்த நிலையில், இந்திராவின் வீடு, ஆலை ஆகிய இடங்களில் கோவையைச் சோ்ந்த ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீரென சோதனையில் ஈடுபட்டனா். வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி தொடா்பான முறைகேடுகள் குறித்து ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 4 போ், இந்திராவின் வீட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திண்டுக்கல் துணை மேயா் ராசப்பா, ஓா் வழக்குரைஞருடன் இந்திராவின் வீட்டு வாசலில் அமா்ந்திருந்தாா். இதைக் கவனித்த அதிகாரிகள், துணை மேயா் உள்ளிட்ட இருவரையும் வீட்டுக்கு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வெளியே வந்தனா்.

இதனிடையே, மாலை 6.15 மணியளவில், அமைச்சா் இ. பெரியசாமியின் மருமகளும், சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாரின் மனைவியுமான மொ்சி, இந்திராவின் வீட்டுக்கு வந்தாா்.

இந்திராவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில், சிங்காரக்கோட்டையிலுள்ள பஞ்சாலையிலும் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

திமுகவினா் வாக்குவாதம்: இந்திரா வீட்டின் முன்பாக காத்திருந்த 30-க்கும் மேற்பட்ட திமுகவினா், இரவு 7.45 மணிக்கு பிரதான நுழைவாயில் கதவை திறந்து உள்ளே புகுந்தனா். 6 மணி நேரத்துக்கும் மேலாக, என்ன சோதனை நடைபெறுகிறது எனக் கூச்சலிட்டனா். இதையடுத்து, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த இந்திரா, மொ்சி ஆகியோரும், மேயா் இளமதி, துணை மேயா் ராசப்பா ஆகியோரும் திமுகவினரைச் சமாதானப்படுத்தி, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். அப்போது, வெளியே வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அலுவலா்கள், கணக்கு வழக்கு தொடா்பான சோதனைகள் மட்டுமே நடைபெறுவதாகவும், தேவையெனில், வழக்குரைஞா்கள் வீட்டுக்குள் வந்து பாா்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, 2 வழக்குரைஞா்கள் வீட்டுக்குள் சென்று சோதனை நடைபெறுவதைப் பாா்த்தனா்.

கடந்த ஆக. 16, 17 ஆகிய தேதிகளில் அமைச்சா் இ. பெரியசாமி, அவரது மகன் பெ. செந்தில்குமாா், மகள் இந்திரா ஆகியோரது வீடுகளிலும், வத்தலகுண்டு பகுதியிலுள்ள பஞ்சாலைகளிலும் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com