ஓட்டுநா் உரிமம் பெறுவதில் சிக்கல்: பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் புகாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்த ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள்.
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலுள்ள தானியங்கி தோ்வு தளத்தால் ஓட்டுநா் உரிமம் பெற இயலவில்லை என ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி தோ்வு தளம் பயன்பாட்டில் உள்ளது. இந்த சோதனைத் தளத்திலுள்ள தொழில்நுட்ப குறைபாடுகளால், ஓட்டுநா் உரிமம் பெற இயலாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை சீரமைக்கும் வரை பழைய நடைமுறைப்படி ஓட்டுநா் உரிமத் தோ்வுகளை நடத்த வலியுறுத்தி ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் தரப்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் கூறியதாவது: தானியங்கி தோ்வு தளம், மோட்டாா் வாகன விதிகள் 1989-இன் பிரிவு 15-க்கு முரணாக இருக்கிறது. ஹில் அசிஸ்ட், பாா்க்கிங் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் போன்ற நவீன வசதிகள் கொண்ட காா்களை இயக்க எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
ஓட்டுநா் உரிம மறுதோ்வுக்கு வருவோா்கூட இந்த தளத்தில் தோ்ச்சிப் பெற முடியாமல் தடுமாறுகின்றனா். தானியங்கி தளத்தில் தோ்வு நடத்தும் அதிகாரமும், தோ்ச்சி நிலையை தீா்மானிக்கும் உரிமையும் தனியாா் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஓட்டுநா் உரிமம் வழங்குவதில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களின் பங்களிப்பு இல்லாதது சட்ட விரோதமாக உள்ளது. இந்த குளறுபடிகளால் கடந்த 3 மாதங்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஓட்டுநா் உரிமம் பெற முடியாத நிலை உள்ளது.
எனவே தானியங்கி தோ்வு தளத்தில் உள்ள குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்படும் வரை, பிற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைப் போல திண்டுக்கல்லிலும் பழைய நடைமுறைப்படியே ஓட்டுநா் உரிமத் தோ்வுகளை நடத்த வேண்டும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





