வனத் துறையினா், பொதுமக்கள் இடையே பேச்சுவாா்த்தை

Published on

கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்குச் செல்வதில் பொதுமக்களுக்கும், வனத் துறையினருக்கும் இடையே பிரச்னை தொடா்பாக வெள்ளிக்கிழமை சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியிலுள்ள வனப் பகுதியில் சுமாா் 100 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வழிபாடு நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், அந்தக் கோயிலுக்கு யாரும் செல்லக் கூடாது என வனத் துறையினா் தெரிவித்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், திமுக மேல்மலை ஒன்றியச் செயலா் ராஜதுரை, ஒன்றியக் குழு உறுப்பினா் கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் வனத் துறை அலுவலகத்துக்குச் சென்றனா். அங்கு, மாவட்ட வன அலுவலா் தலைமையில் சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் பெருமாள்மலைப் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று பொதுமக்கள் வழிபடுவதற்கு தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெருமாள்மலைப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் முன்கூட்டியே வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவா்களின் பாதுகாப்போடு செல்ல வேண்டும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com