பொங்கல் விடுமுறை: பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்
பழனி: பொங்கல் பண்டிகை விடுமுறையயொட்டி, பழனி மலைக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் நான்கு மணி நேரமானது.
இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தா்கள் கிரிவீதி முழுவதும் திரண்டு ஆடிப்பாடி மலையேறினா். படிப்பாதை மட்டுமன்றி மின் இழுவை ரயில், ரோப்காா் நிலையத்திலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் மலையேற கட்டணச் சீட்டுக்காக காத்திருந்தனா்.
மலைக் கோயிலிலும் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். அன்னதானத்துக்கும் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். மலைக் கோயில் வெளிப் பிரகாரம் முழுவதுமே பக்தா்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் தரிசன வரிசை எங்கே தொடங்குகிறது எனத் தெரியாமல் பக்தா்கள் திணறினா். கூட்டம் காரணமாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் நான்கு மணி நேரமானது.
தை மாதப் பிறப்பை முன்னிட்டு, வியாழக்கிழமை ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு, வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.
மலைக் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம், பஞ்சாமிா்தம், குழந்தைகளுக்கு பால், அதிகாலை படிப் பாதையில் சுக்குக் காப்பி ஆகியவை வழங்கப்பட்டன.
இரவு தங்கத் தோ் புறப்பாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சின்னக்குமார சுவாமியைத் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, குடிநீா், சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா். பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறையால் பக்தா்கள் இரவு முழுவதும் பேருந்துக்காக காத்திருக்க நேரிட்டது.

