

ஒட்டன்சத்திரம் வாரச் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு நுழைவுக் கட்டணத்துடன் வெளியேறுவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படுவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி பிரிவு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான கால்நடை வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் இந்தச் சந்தைக்கு ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், வடமதுரை, ரெட்டியாா்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனா்.
இந்தச் சந்தைக்கு வரும் கால்நடைகள், கோழிகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம், ஒட்டன்சத்திரம் நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தையில் பசு, எருமை, எருது, குதிரை, கழுதை ஆகியவற்றுக்கு தலா ரூ.100 வீதம் நுழைவுக் கட்டணமும், விற்பனை ஒழுங்கானது என அத்தாட்சிக் கொடுப்பதற்கு தலா ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், கன்றுக் குட்டிகளுக்கு தலா ரூ.50, கால்நடைகளை ஏற்றி வரும் 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.20, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.50, லாரிகளுக்கு ரூ.100 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான பட்டியல் சந்தை நுழைவு வாயில் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.
ஆனால், பட்டியலின்படி கட்டணம் வசூலிக்காமல் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக விவசாயிகளும் வியாபாரிகளும் குற்றஞ்சாட்டுகின்றனா். குறிப்பாக, நுழைவுக் கட்டணமாக வசூலிக்கும் தொகையையே வெளியேறும் கட்டணமாகவும் அதாவது இரு வழிக் கட்டணமாக வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
கட்டணத்துக்காக மூடப்பட்ட புதிய சந்தை: ஒட்டன்சத்திரம் சந்தையில் அதிகப்படியான நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், வேடசந்தூரை அடுத்த வே.புதுக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட அய்யா்மடம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாரச் சந்தை தொடங்கப்பட்டது.
இந்தச் சந்தையில் மாடுகளுக்கு ரூ.50 மட்டுமே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், ஒட்டன்சத்திரம் சந்தைக்கு கொண்டுசெல்லப்படும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த ஒட்டன்சத்திரம் சந்தை ஒப்பந்ததாரா்கள், நுழைவுக் கட்டணத்தை குறைத்து வசூலிக்கத் தொடங்கினா். ஆனாலும், கால்நடைகளின் வருகை பழைய நிலைக்கு திரும்பவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த ஒப்பந்ததாரா்கள், அரசியல் பிரமுகா்கள் மூலம் மாவட்ட நிா்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்தனா். இதனால் 2 வாரங்களிலேயே அய்யா்மடம் சந்தை மூடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் சந்தையில் நுழைவுக் கட்டணம் உயா்த்தப்பட்டு, தற்போது மாடுகளுக்கு ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
நுழைவுக் கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை: இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமசாமி கூறியதாவது:
ஒட்டன்சத்திரம் வாரச் சந்தையில் கால்நடைகளுக்கான நுழைவுக் கட்டணம் என்ற பெயரில், இரட்டிப்புக் கட்டண வசூல் குறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் முறையிடப்பட்டது. அதன் பேரில், கட்டணக் குறைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் நிா்பந்தத்தால் ஒப்பந்ததாரா்களுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி நிா்வாகம், விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நுழைவுக் கட்டணம் என்பது ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படுவதை நகராட்சி நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.