திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதியான மாணவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநரகம் வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கான 5 விடுதிகள், மாணவிகளுக்கான 2 விடுதிகள் என 7 அரசு கள்ளா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தங்கிப் படிக்கலாம். அனைத்து விடுதி மாணவா்களுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் மூலம் நீட், ஜெஇஇ தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்:
பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு 8 கி.மீட்டருக்கு கூடுதலாக இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.
தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள இணை இயக்குநா் (கள்ளா் சீரமைப்பு) அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வருகிற 18-ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.








