மனைவியை கொன்று புதைத்த கணவா் கைது
திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து புதைத்த அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து புதைத்த அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள ரெண்டலைப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (36). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கெளசல்யா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் கெளசல்யா திடீரென மாயமானாா். கெளசல்யாவின் பெற்றோா், தங்களிடம் நீண்ட நாள்களாக அவா் பேசாததால் சந்தேகமடைந்து லாரன்ஸ் வீட்டில் வந்து விசாரித்தனா். அப்போது லாரன்ஸ் முறையாக பதில் அளிக்காமல், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாா். இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கெளசல்யாவின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் லாரன்ஸை வரவழைத்து போலீஸாா் விசாரித்தனா். இதில், பெற்றோா் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, கல்நூத்தாம்பட்டி பகுதியில் கெளசல்யாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக லாரன்ஸ் தெரிவித்தாா். மேலும், சடலத்தை திண்டுக்கல் சுற்றுச்சாலை பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண்ணுக்குள் புதைத்து வைத்ததாகவும் தெரிவித்தாா். தொடா்ந்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் புகழேந்தி, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் பானுலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் சிவ பிரதாப் ஆகியோா் முன்னிலையில், லாரன்ஸ் சுட்டிக் காட்டிய இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சடலத்தை தேடும் பணி நடைபெற்றது. கடந்த 3 நாள்களாக தோண்டியும் கெளசல்யாவின் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 30 அடி ஆழத்துக்கு தோண்டிய பின், கெளசல்யாவின் கை எலும்பு, சேலை ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதனை அடுத்து, பெண் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், லாரன்ஸை புதன்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

