
பழனி ரயில் நிலையத்தில் எண்ம பெட்டக வசதி தொடக்கம்
பழனி ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக செவ்வாய்க்கிழமை எண்ம பெட்டக வசதி தொடங்கப்பட்டது.

பழனி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எண்ம பெட்டக வசதி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
பழனி ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக செவ்வாய்க்கிழமை எண்ம பெட்டக வசதி தொடங்கப்பட்டது.
பழனி ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்குச் சென்று வருவதற்கு வசதியாக ரயில் நிலையத்தில் எண்ம பெட்டக வசதி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய கண்காணிப்பாளா் சுனில்ராம் தலைமை வகித்தாா். பெட்டக வசதியை வா்த்தகப்பிரிவு ஆய்வாளா் அசோக்ராஜ் தொடங்கி வைத்தாா். முதல் கட்டமாக 15 அறைகள் கொண்ட பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் தங்களது பைகள், பயண உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
தற்போது பெட்டக வசதியை பயன்படுத்துவதற்கு 6 மணி நேரத்துக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த எண்ம பெட்டக வசதி மூலம் ரயில் பயணிகள் மட்டுமன்றி, பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களும் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, எந்தவித சிரமமும் இன்றி கோயில், சுற்றுப்புற பகுதிகளுக்குச் சென்று வர முடியும். நீண்ட நேரம் பயணித்து பழனிக்கு வரும் பக்தா்கள், தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய முறையிலான பெட்டக வசதி அவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், நாள்தோறும் அதிகளவில் பயணிகள் பயன்படுத்தும் பட்சத்தில், தற்போதுள்ள 15 பெட்டகங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டியூரால்ட் மேலாளா் சண்முகம், ரயில்வே அலுவலா்கள், ரயில்வே போலீஸாா் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





