/

150 ஆண்டு கால பாரம்பரிய திருமங்கலம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுமா?

150 ஆண்டு கால பாரம்பரிய திருமங்கலம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுமா? என்பது பற்றி...

News image

திருமங்கலம் ரயில் நிலையம். - படம் - தினமணி

Updated On :7 ஆகஸ்ட் 2026, 5:09 am IST

மதுரை - திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருமங்கலம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், போதிய அடிப்படை வசதிகளின்றி பயணிகள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1875-ஆம் ஆண்டு மதுரையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 1876-இல் மதுரை - திருநெல்வேலி வழித்தடத்தில் திருமங்கலம் நகரில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது, நீராவியால் இயங்கிய ரயில் என்ஜின்களுக்கு நீர் நிரப்புவதற்காக திருமங்கலத்தில் உள்ள குண்டாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இத்தகைய பின்னணி கொண்ட திருமங்கலம் ரயில் நிலையத்தில் தற்போது மொத்தம் 3 நடைமேடைகள் உள்ளன. தினசரி, வாராந்திர ரயில்கள் என நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தின் முன்பகுதி நிலைய அலுவலர் அறையின் அருகில் மட்டுமே சிறிய நிழல்கூரை உள்ளது. நடைமேடையின் மற்ற இடங்களில் நிழல்கூரை ஏதும் இல்லை. இதேபோல, இரண்டாவது நடைமேடைப் பகுதியிலும் குறிப்பிட்ட இடத்தைத் தவிர மற்ற இடங்களில் நிழல்கூரை வசதி இல்லை. இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் ஒதுங்க இடமின்றித் தவிக்கின்றனர்.

மேலும், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால், நடைமேடைகளும் சுற்றுப்புறப் பகுதிகளும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. நடைமேடைகளை இணைக்கும் நடை மேம்பாலம் மிக உயரமாக அமைக்கப்பட்டதால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் இதைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் வசதியை உடனடியாக நிறுவ வேண்டும்.

திருமங்கலம் ரயில் நிலையத்தின் வெளியே பூட்டிக் கிடக்கும் கட்டணக் கழிப்பறை.

திருமங்கலம் ரயில் நிலையத்தின் வெளியே பூட்டிக் கிடக்கும் கட்டணக் கழிப்பறை. - படம் - தினமணி

பூட்டப்பட்ட ஓய்வறையும், கழிப்பறைகளும்:

ரயில் நிலையத்திலுள்ள பயணிகள் ஓய்வறை எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அங்கு போதுமான நாற்காலிகள் இல்லாமல், தூசி படிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளும் பூட்டப்பட்டு, பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் சாவியைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. தடையின்றி கிடைக்கும் குடிநீர் வசதியைத் தவிர, பிற எந்த அடிப்படை வசதியும் இந்த ரயில் நிலையத்தில் முழுமையாகச் செயல்படவில்லை.

ரயில் நிலையத்தின் முன்பகுதியில் கருவேல மரங்களுக்கு இடையே பழைமையான 'ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை மறைவிடமாகக் கொண்டு பகல் நேரங்களிலேயே மது அருந்துவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையத்தைச் சுற்றி முறையான தடுப்புச்சுவர் இல்லாததால், சட்டவிரோதமாக சிலர் உள்ளே நுழைகின்றனர். இதேபோல, திருமங்கலம் நகரிலிருந்து பெட்ரோல் விற்பனை நிலையம் வழியாக ரயில் நிலையத்துக்கு வரும் அணுகு சாலையை சிலர் அடைத்து வைத்துள்ளதால், பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.

இந்த ரயில் நிலையம் மூலம் நாள்தோறும் சராசரியாக ரூ.17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. தத்கல் உள்பட நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. எனவே, இதை வருவாய் குறைந்த ரயில் நிலையம் என்ற காரணத்தைக்கூறி புறக்கணிக்காமல், பயணிகளின் நலனைக்கவனத்தில் கொண்டு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.பி. சிவசுந்தரம் கூறியதாவது:

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய விரைவு ரயில்களும், பண்டிகைக்கால சிறப்பு ரயில்களும் திருமங்கலத்தில் நிற்காமல் செல்வது இந்தப் பகுதி மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. அனைத்து நடைமேடைகளிலும் நிழல்கூரைகள் அமைக்க வேண்டும். முக்கிய விரைவு ரயில்கள் இங்கு ஒரு நிமிஷம் மட்டுமே நிற்கின்றன. இதனால், முதியவர்கள் ரயில்களில் விரைவாக ஏறி, இறங்க முடியாத சூழல் உள்ளது. எனவே, இந்த ரயில்கள் நிற்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகமும் மதுரைக் கோட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் கூறியதாவது:

திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் விரைவு ரயில்களின் நேரத்தை அதிகரிக்க வேண்டும். ரயில் நிலையத்துக்கு சுற்றுச்சுவர் தடுப்பு வேலி இல்லாததால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து மது அருந்துதல் உள்ளிட்ட செயல்ளில் ஈடுபடுகின்றனர். எனவே, திருமங்கலம் ரயில் நிலையத்தை மேம்படுத்தி கூடுதலாக விரைவு ரயில்கள் இங்கு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.