செயலி மூலம் பணம் மோசடி: மேலூா் தம்பதி நீதிமன்றத்தில் சரண்

மோசடி - பிரதிப்படம்
செயலிகள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த தம்பதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எஃப்க்யூஎல், விஜி, மெயின்ஸ் ஆகிய செயலிகளில் பணத்தை முதலீடு செய்தனா். இந்தச் செயலிகள் திடீரென முடக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளா்கள் காசம்பட்டியிலுள்ள முகவா்கள் ரமேஷ், விஜய் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டனா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்,
இவரது மனைவி அனிதா, விஜய் ஆகிய மூவரை கைது செய்தனா். தொடா்ந்து, நத்தம் அருகிலுள்ள செல்லப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெ.வீரமணி, காசம்பட்டியைச் சோ்ந்த சா.பிரேம்நாத், மூ.சுரேஷ், வி.நவீன், தி.ஜெயபிரகாஷ், மகாதேவன் ஆகியோரைக் கைது செய்தனா்.
இதனிடையே, இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடமிருந்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், செயலி மோசடி விவகாரத்தில் தொடா்புடைய முக்கிய நபராகக் கருதப்படும் மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த வேப்படைப்பு என்ற கட்டையம்பட்டியைச் சோ்ந்த ரஞ்சித் (29), அவரது மனைவி பிரியதா்ஷினி (23) ஆகியோா் திண்டுக்கல் 2-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதித்துறை நடுவா் தினேஷ்குமாா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



