தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சிறந்தவை மற்றும் மேம்படுத்தப்படவேண்டியவை என தர வரிசைப்படுத்தி கணக்கெடுக்க கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On :12 ஜூலை 2017, 3:23 am

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சிறந்தவை மற்றும் மேம்படுத்தப்படவேண்டியவை என தர வரிசைப்படுத்தி கணக்கெடுக்க கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
     மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்  மேல்நிலை, உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் என கல்வி மாவட்டத்துக்கு  தலா 3 பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக அடையாளம் கண்டு பட்டியலிட  உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  
   மேல்நிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு,  ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு வருகைதருவது,  மாணவர் வருகை,  பள்ளி நேரங்களின் போது உள்ள சூழல் மற்றும் அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்,   மேல்நிலை வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி  செல்லும் விவரம்,  நீட் தேர்வில் தற்போது தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்,  மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்புக்கு சென்ற மாணவர்கள் விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த பள்ளிகளைப் பட்டியலிடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
    சிறந்த பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு பரிசுகள்,  சிறப்புத் திட்டங்கள் மூலம் மேம்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளவும் அப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் சிறந்த பணிக்கான விருதுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  சிறந்த பள்ளிகளைப் போலவே  தரம் குறைந்த பள்ளிகளையும் பட்டியலிட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  குடிநீர் வசதி, கழிப்பறைகள் வசதி,  மாணவர் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம்,  ஆசிரியர்கள் வருகை நேரம், அவர்கள் தொடர்ந்து பள்ளியில் இருக்கிறார்களா? என்பன போன்ற விவரங்கள் அடிப்படையில்  தரம் கணக்கிடப்படுகிறது.  மிக மோசமான தரத்தில் உள்ள 9 பள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தவும்,  அங்குள்ள ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  ஆய்வில் அதிர்ச்சி:  சமீபத்தில் மதுரை மாவட்டத்தில் மேலூர் கல்வி மாவட்ட பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.  5 பள்ளிகளில் ஆய்வில்,  மேலூர் அரசுப் பள்ளிகளில் மட்டுமே முழுமையாக ஆசிரியர்கள் பணியில் இருந்துள்ளனர்.  குறிப்பிட்ட சில பள்ளிகளில் 5 ஆசிரியர்களுக்கு இருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர்.  அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பணி நேரத்தில் பள்ளி வளாகத்திலேயே இல்லாதது கண்டறியப்பட்டது. மேலும்,  பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஒரு பிரிவாகவும்,  ஆசிரியர்கள் ஒரு பிரிவாகவும் செயல்படுவதால் ஒருங்கிணைந்த பணியின்றி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததும் தெரியவந்துள்ளது.
  அலங்காநல்லூர் பள்ளியில் வேன் ஓட்டுநருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரையே மற்ற ஆசிரியர்கள் எதிர்த்து பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பிரச்னைகளை போக்கும் வகையில் தற்போது பள்ளிகள் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.  மதுரை மாவட்ட அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் 30 பேர் மட்டுமே தற்போது  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சிப் பட்டியலில் முன்னேற்றடைய அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வருகை  உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும்,  அதற்கு மின்னணு வருகைப் பதிவேடு  முறை செயல்படுத்தப்படவேண்டும் என்றும் மூத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.