கூடங்குளம் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன், சேலம்-சென்னை எட்டுவழிச்சாலையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று சிறையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் முகிலன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டவர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் மதுரை மத்தியச்சிறையில் முகிலன் தனிமைப்படுத்தப்பட்டு தனியறையில் அடைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி 10 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மத்தியச் சிறையில் புதன்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதில் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலையை மத்திய மாநில அரசுகள் கைவிடவேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்வதாக அரசு அறிவித்திருந்த 10 ஆண்டு சிறைத்தண்டனை முடித்த கைதிகள் அனைவரையும் காலதாமதம் இன்றி விடுவிக்க வேண்டும்.சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-யிடம் ஒப்படைக்காமல் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் அறிக்கை, மணல் கடத்தல் தொடர்பான ககன்தீப்சிங்பேடி அறிக்கை ஆகியவற்றின் மீது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யக்கூடாது. மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தியை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை சிறை நிர்வாகத்திடம் மனுவாக அளித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.