இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டிற்குள் 7.5 சதவீதத்தை எட்டும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறினார்.
சுதேசி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் இந்திய பொருளாதாரம் இன்றைய நிலை மற்றும் எதிர்கால பார்வை என்ற தலைப்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது: 2008-2014 ஆம் ஆண்டு வரை முறையான ஆவணங்களின்றி, அரசியல்வாதிகளின் நெருக்கடியால் 38 லட்சம் வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் நிர்வாகம் சீர்குலைந்தது, வாராக் கடன் எண்ணிக்கை அதிகரித்தது. இதைச் சீரமைக்கவே தற்போதுள்ள அரசு போராடி வருகிறது.
இதேபோல மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது அடுத்த ஆண்டிற்குள் 7.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதத்தை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளதாகவும் உலக வங்கி கணித்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே ஆண்டுக்கு ஒரு சதவீத வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு கஷ்டப்படும் வேளையில், இந்தியாவின் வளர்ச்சி அனைத்து நாடுகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
2012-2014 ஆம் ஆண்டில் 9.5 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 3.6 சதவீதம் குறைந்துள்ளது. இத்தனை ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ரிசர்வ் வங்கிக்கு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் சீரான பொருளாதார வளர்ச்சியைச் சந்திக்க முடியும். ஜிஎஸ்டிக்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழும்பின. ஆனால், இதன்மூலம் மறைமுகமாக இருந்த பல வரிகள் தடுக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே விதமான வரி வசூலிக்கப்படுவதன் மூலம் தொழில்கள் வளர்ச்சியடையும்.
ஜிஎஸ்டியின் பலனில் 80 சதவீதத்தை மட்டுமே நாடு தற்போது அனுபவித்து வருகிறது. இதன்மூலம் வருமானம் 1 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியின் பலன்கள் 100 சதவீதம் முழுமையாக உபயோகப்படுத்தப்படும்போது மக்களின் வாழ்வாதாரம் உயரும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 142 இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 140 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தியாகராஜர் மில்ஸ் நிறுவனத் தலைவர் கருமுத்து தி.கண்ணன் பேசியது: தமிழகத்தில் தொழில் முதலீடுகள் எதுவும் இல்லை. இதனால் வேலைவாய்ப்புகளின்றி இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மதுப்பழக்கம் காரணமாக குடும்பத்தின் ஒழுக்க நெறிகள் சிதைந்து வருகிறது. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆண்களை குடிப்பழக்கத்துக்கு இழந்து வருவது வேதனையளிக்கிறது.
தென்மாவட்டங்கள் அனைத்துக்குமான பொதுத்தளமாக மதுரை உள்ளது. ஆனால், இங்கு தொழில் வளர்ச்சி என்பது பெரிய அளவில் இல்லை. மதுரை-தூத்துக்குடி வணிகச் சாலையின் மூலம் முதலீடுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு கிடைக்கவில்லை. சென்னை, கோவைக்கு சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டதுபோல மதுரைக்கும் செய்ய வேண்டும். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிலாளர்கள் பயனடைவர் என்றார்.
சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்புச் செயலர் ஹெச்.ஆதிஷேசன், அகில இந்திய இணை அமைப்பாளர் இரா.சுந்தரம், சுந்தரம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன செயல் இயக்குநர் மிருதுளா ரமேஷ், ஸ்ரீகிருஷ்ணா அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் என்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து!

உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைக்குத் தடை விதித்த ஃபிஃபா!

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி
இந்தியக் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது: ஈரான்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


