வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மதுரை காமராஜர் பல்கலை.யில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ரூ.1.63 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 2:54 am

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ரூ.1.63 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது.
 மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக்கூட்டம் புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர் மு.வ.அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை தலைமையில் பல்கலைக்கழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்கலைக்கழகத்தின் உத்தேச வருவாய் (2018-19) ரூ.83.93 கோடி, உத்தேச செலவு 101.57 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பற்றாக்குறையாக ரூ.1.63 கோடியாக உள்ளது.
ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறியதாவது: காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி வரவு, செலவு விவரங்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. ரூ.1.63 கோடி பற்றாக்குறை உள்ளது. பல்கலைக்கழகத்தின் ஊதியமாக ரூ.46.7 கோடி செலவிடப்படுகிறது. துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.41 கோடி செலவிடப்படுகிறது. பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.12 கோடி செலவிடப்படும்.
  ஆட்சிப் பேரவையில் கல்விப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டடங்கள், வெளி வளாக வகுப்புகள் திட்டம் மற்றும் தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது ஆகியவற்றுக்கும் ஆட்சிப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தமிழ் அருங்காட்சியகம் அமைக்க சிறப்புக் குழு அமைக்கும் முடிவை எடுக்க துணைவேந்தருக்கு அதிகாரம் அளித்து ஆட்சிப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
 பல்கலைக்கழக ஆட்சிக்குழுவுக்கு கல்வி மற்றும் ஆட்சிப் பேரவையிலிருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்தவேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  பல்கலைக்கழக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைகளைத் தீர்க்கும் வகையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் பேராசிரியர் செல்வம், ஆங்கிலப் பேராசிரியர் செல்லையா, வரலாற்றுத்துறை பேராசிரியர் ராமு,  இரண்டு டீன்கள், மன்னர் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரும் இடம் பெறவுள்ளனர் என்றார்.
கூட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அறிவியல், கலை கண்காட்சிகள் நடத்தியது, வெளிநாட்டு பல்கலைக்கழகம், தமிழ் அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு 
ஒப்பந்தம் ஆகியவற்றுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 
கூட்டத்தில் பதிவாளர் சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.