தென்மாவட்டங்களைச் சேர்ந்த காய்கனி, பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மதுரையில் நவீன வேளாண் வணிக முனையம் (பங்ழ்ம்ண்ய்ஹப் ஙஹழ்ந்ங்ற் இர்ம்ல்ப்ங்ஷ்) அமைக்கும் திட்டம், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெரும் தொழில் நிறுவனங்கள் இல்லாத தென்மாவட்டங்களில் விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது. அதிலும், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் மல்லிகை உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன.
குறைந்து வரும் சாகுபடி நிலங்கள், பாசனநீர் பற்றாக்குறை ஆகியன விவசாயத்துக்கு பெரும் சவாலாக இருந்துவரும் நிலையில், மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் ஆகியன உணவு தேவையில் தன்னிறைவை அடைவதற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு, காய்கனிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
அரசு திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், சந்தையில் விற்பனை செய்யப்படும் விலைக்கும் பெரும் வித்தியாசம் இருந்து வருகிறது. இதனால், பெரும்பாலான நேரங்களில் விவசாயிகள் உற்பத்திக்கான செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனிடையே, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு, விவசாயிகளை இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிடுகிறது.
இந்நிலையில், விவசாய விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில், நவீன வேளாண் வணிக முனையம் அமைக்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், தென்மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், மதுரையில் இந்த முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் நடத்தப்படும் இந்த முனையத்தில் காய்கனி, பழங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருள்களை சில்லறை மற்றும் மொத்த விற்பனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த முனையத்தின் கண்காணிப்பு அமைப்பாக, தமிழக அரசின் வேளாண் வணிகத் துறை இருக்கும்.
இதன்படி, இந்த வணிக முனையம் அமைப்பதற்கு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.120.06 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மானியமாக ரூ.46.25 கோடிக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இடம் தேர்வு செய்வதில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், மதுரை அருகே உள்ள திருவாதவூர் மற்றும் முக்கம்பட்டி கிராமங்களுக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 20 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, மதுரையில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வேளாண் வணிக முனையம் அமைக்க 2017 ஜூலையில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. வேளாண் துறைச் செயலர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மதுரையில் நவீன வேளாண் வணிக முனையம் அமைக்கப்பட்டால், தென் மாவட்டங்களில் வேளாண் விளைபொருள்களின் உற்பத்தி மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. தற்போது, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களில் வேளாண் விளைபொருள்கள்தான் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், நவீன வேளாண் முனையம் வரும் நிலையில் ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த முனையத்தில் குளிர்ப்பதன கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது போன்றவற்றில் எந்தப் பிரச்னையும் இருக்காது. எனவே, இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே இப் பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இது குறித்து வேளாண் வணிகத் துறையினர் கூறியது: மதுரையில் நவீன வேளாண் வணிக முனையம் அமைக்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. திட்டச் செயலாக்கம் தொடர்பான சில முடிவுகள் எடுப்பது ஆய்வில் இருந்து வருகிறது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.