குமரிக் கடலில் மாயமான மீனவரை ஹெலிகாப்டரை அனுப்பி தேட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவரை ஹெலிகாப்டரை அனுப்பி தேடும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
Madurai High Court Order
Madurai High Court Order

இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவரை ஹெலிகாப்டரை அனுப்பி தேடும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

குமரி மாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"ஆகஸ்ட் 7 (இன்று அதிகாலை)ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் இக்னேசியஸ் என்ற மீனவர் கடலில் விழுந்த நிலையில், சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் இயலவில்லை. இது போல மீனவர்கள் காணாமல் போகும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 24ஆம் தேதி இதே போல ஷிபு என்ற இளைஞர் மீன் பிடிக்கச் சென்றபோது மாயமானார். கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை.

இந்த சூழலில் தற்போது மீனவர் இக்னேஷியஸ் மாயமாகியுள்ளார். மீனவர்களை மீட்க வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதியை செய்து தரக்கோரி பலமுறை அரசிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாகவே மீனவர்கள் காணாமல் போவதும், உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்கும் வகையில் வான்வழி மீட்பு ஆம்புலன்ஸ் வசதியை குமரி அல்லது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கவும், காணாமல் போன மீனவர் இக்னேசியஸை மீட்டு ஆஜர்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தொய அரசுத்தரப்பில் 12 நாட்டிக்கல் தொலைவிற்குள் எனில் மாநில அரசே தேட வேண்டும். அதைத்தாண்டிய தொலைவு எனில் மத்திய அரசு தேடுதல் பணியை மேற்கொள்ளும். ஆனால் மீனவர் இக்னேசியஸ் காணாமல் போனது குறித்து தற்போது வரை மத்திய அரசுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஹெலிகாப்டரை அனுப்பி காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com