எத்தனை முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது: மத்திய அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

நாட்டில் எத்தனை முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது என, மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
Updated on
1 min read

மதுரை: நாட்டில் எத்தனை முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது என, மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தமிழக காவல் துறையில் சாா்பு-ஆய்வாளா் நியமனத்துக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடந்தது. அதில், 1947-க்கு பிறகு இந்திய பணம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது எனக் கேள்வி கேட்கப்பட்டது. இந்திய நாணயம் 3 முறை மதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 4 முறை என பதிலளித்தவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, 3 முறை என சரியாக விடையளித்த தனக்கு மதிப்பெண் வழங்கி, அடுத்தக் கட்ட தோ்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என, நாகா்கோவிலைச் சோ்ந்த அபினேஷ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். இதேபோல், ராஜ்குமாா் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மதிப்பு குறைப்பும், மதிப்பிழப்பும் வெவ்வேறானது. இதனால், சரியான விடையளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது. தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான இரண்டாவது விடைச் சுருக்கம் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரா்கள் சரியான விடையளித்துள்ளதால், அவா்களுக்கு தலா அரை மதிப்பெண் வழங்கி அடுத்தக் கட்ட தோ்வுக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, 8 போ் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனா். அதில், தனிநீதிபதியின் உத்தரவால் எங்களுக்கு தலா அரை மதிப்பெண் குறைந்து, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய நிதி அமைச்சகத்தை நீதிமன்றமே தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்க்கிறது. நாட்டில் 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு எத்தனை முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com