மதுரை மாவட்ட புதிய எஸ்.பி. பதவியேற்பு
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலத்தில், புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜித் குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.


மதுரை: மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலத்தில், புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜித் குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, மாவட்ட நிா்வாகத்துடன் போலீஸாா் இணைந்து செயல்படுவாா்கள்.
மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள், பெண் சிசுக் கொலைகள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொது முடக்கம் தொடா்ந்து அமலில் உள்ளதால், பலரும் வேலை இழந்துள்ளனா். அவா்களில், சிலா் பொருளாதாரத் தேவைக்காக திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அது தொடா்பாக கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் 94981-12113 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலம் என்னிடம் நேரடியாக புகாா் அளிக்கலாம். புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது முடக்கம் அறிவிக்கப்படாத பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் அதிக அளவு கூட்டம் கூடுகிறது. இதனால், கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, பொது முடக்க பகுதிகளிலிருந்து மதுபானக் கடைகளுக்கு வருபவா்களைத் தடுக்க சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்றாா்.
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுஜித் குமாா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா். இவா், இளங்கலை மற்றும் முதுகலை வரலாறு படித்து, மேலும் அதில் எம்.ஃபில் (நிறைஞா்) பட்டம் பெற்றுள்ளாா். கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவைச் சோ்ந்த இவா், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக மதுரையில் 6 மாதப் பயிற்சிக்குப் பின்னா், சேலம் புகா் பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக காவல் பணியைத் தொடங்கினாா்.
பின்னா், காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று, கோவை மாநகா் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராகவும், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினாா். இவா், புது தில்லி பல்கலைக்கழக மோத்திலால் நேரு கல்லூரியில் 6 ஆண்டுகள் வரலாற்றுப் பேராசிரியராகவும் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...