/

2-ஆம் நிலை காவலர் பணி: இளைஞர்கள் முற்றுகை

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணிவாய்ப்பை இழந்த இளைஞர்கள் தங்களுக்கு பணி வழங்க பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

DIN

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணிவாய்ப்பை இழந்த இளைஞர்கள் தங்களுக்கு பணி வழங்க பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த மேற்படி தேர்வில் பங்கேற்ற 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியது: தமிழக அரசின் சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2019 இல் இரண்டாம் நிலை காவலர் பணி நியமனத்துக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

காலியாக உள்ள 8,500 பணியிடங்களைப்  பூர்த்தி செய்வதற்கான இத்தேர்வில் 21,000 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.  இதில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பெற்றவர்கள் போக 11 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் தமிழக அரசு இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மேலும் 10,000 பேர் வரை நிகழ் நிதியாண்டில் நியமனம் செய்ய உள்ளது. தற்போது இருக்கக் கூடிய கரோனா பேரிடர் சூழ்நிலையில் ஆள்தேர்வு நடத்துவது இயலாது. ஆகவே ஏற்கனவே தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து உதவலாம். 

நாங்கள் அனைவரும் உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். எழுத்துத்தேர்வில் கட்ஆப்  மதிப்பெண்களில் சொற்ப வித்தியாசத்தில் பணி வாய்ப்பு கிடைக்காமல் போனது.  மேலும் எங்களில் பலருக்கு வயது வரம்பு காரணமாக அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே ஏற்கனவே சான்றதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்களுக்கு புதிய பணி நியமனங்கள் வழங்கி உதவ வேண்டும். ஏற்கெனவே 2006 இல் இதே நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.