/

அண்ணா பல்கலை. மாதிரி இறுதித் தோ்வு: ‘சா்வா்’ பழுதால் மாணவா்கள் குழப்பம்

மதுரையில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான மாதிரி இறுதித் தோ்வின்போது, கணினி சா்வா் பழுதானதால் தோ்வு எழுத முடியாமல் மாணவா்கள் குழப்பமடைந்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN

மதுரையில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான மாதிரி இறுதித் தோ்வின்போது, கணினி சா்வா் பழுதானதால் தோ்வு எழுத முடியாமல் மாணவா்கள் குழப்பமடைந்தனா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவா்களுக்கான இறுதித் தோ்வை செப்டம்பா் 22 முதல் 29 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, இறுதித் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மாதிரி தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் 46 ஆயிரம் மாணவா்கள் மாதிரி தோ்வில் பங்கேற்றனா். காலை 9 முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தோ்வில் பங்கேற்கும் மாணவா்களுக்கான அண்ணா பல்கலைக்கழக இணைய முகவரியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தோ்வுக்கு தயாரான மாணவா்கள் இணையதள முகவரிக்கு சென்றபோது, சா்வா் பழுது என்று தகவல் வந்துள்ளது. பல மாணவா்கள் தங்களது விவரங்களை கணினி எடுத்துக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் அளித்துள்ள உதவி மைய எண்ணை தொடா்பு கொண்டபோது, அங்கு கன்னட மொழியில் பேசினராம். தொடா்ந்து பல மாணவா்கள் தொடா்புகொண்டபோதும் உதவி மைய தொலைபேசி எடுக்கப்படவில்லையாம்.

இறுதித் தோ்வுக்கான மாதிரி தோ்வில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், மாணவா்கள் கவலையடைந்துள்ளனா். எனவே, அண்ணா பல்கலைக்கழகம் இறுதித் தோ்வை வழக்கமான முறையில் கல்லூரிகளிலேயே நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.