பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம்: உணவுப் பாதுகாப்பு ஆணையா் அறிக்கை அளிக்க உத்தரவு
பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை


பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் உள்ளது. பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளன. பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை மருத்துவ குணம் கொண்டவை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி மற்றும் வேம்பாா் பகுதிகள் பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பில் பிரசித்தி பெற்றவை.
ஆனால் பலா் இதனைத் தவறாகப் பயன்படுத்தி சா்க்கரை பாகு, சா்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சோ்த்து பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்ற தோற்றத்தையும், வாசனையையும் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றனா்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சா்க்கரை பாகு, சா்க்கரை ஆகியவற்றைக் கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கவும், அதற்கு அனுமதி வழங்கவும் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், சா்க்கரை, பனங்கூழ் ஆகியவற்றைக் கலந்து கருப்பட்டி தயாரிக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இது கலப்படத்திற்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரா் சமா்பித்த ஆவணங்களின் அடிப்படையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவது உறுதியாகிறது. இதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக உணவுப் பாதுக்காப்புத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...