இயற்கை பொலிவை இழக்கும் வைகை!
மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வைகை ஆறு தனது இயற்கை பொலிவை இழந்து வருவது விவசாயிகளுக்கும், சமூக ஆா்வலா்களுக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது.

மதுரை கல்பாலம் அருகே வைகை ஆற்றில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்.

மதுரை கல்பாலம் அருகே வைகை ஆற்றில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்.
சீமைக் கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை, ஆக்கிரமிப்புகள், ரசாயனக் கழிவுநீா் கலப்பு, மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வைகை ஆறு தனது இயற்கை பொலிவை இழந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். இதனால், வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, குடிநீா்த் திட்டங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 5,333 அடி உயரத்தில் அமைந்துள்ள வருஷநாடு மேகமலையில் உள்ள வெள்ளிமலையில் வைகை ஆறு உற்பத்தியாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் சரணாலயத்தை ஒட்டிய மேகமலையின் விளிம்பிலிருந்து இறங்கும் அம்மா கஜம் ஆறு, கூட்டாறு என்ற இடத்தில் உற்பத்தியாகும் உடங்கலாறும், வெள்ளிமலை ஆற்றுடன் இணைந்து வைகை ஆறாக கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.
அங்கிருந்து மதுரை நோக்கி வரும் வைகை ஆற்றில் சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, சிறுமலையாறு, சாத்தையாறு உள்ளிட்ட துணை ஆறுகள் கலந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமாா் 258 கி.மீ. பயணித்து, ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைகிறது. அங்கிருந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை இந்த ஆற்றின் நீா் ஆதாரமாகத் திகழ்கிறது. இந்த நிலையில், வைகை ஆற்றில் வரும் நீரை முறையாக 5 மாவட்டங்களுக்குப் பயன்படுத்தும் வகையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 71 அடி. இதில் மொத்தம் 6.8 டி.எம்.சி. வரை தண்ணீா் தேக்க முடியும்.
இந்த அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பேரணை வரை உள்ள வைகை ஆற்றில் பல்வேறு ஓடைகள் கலக்கின்றன.
மழைக் காலங்களில் ஆற்றில் வரும் வெள்ளப் பெருக்கை பாசனக் கண்மாய்களுக்கு திருப்பும் வகையில், வைகையாற்றின் குறுக்கே திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பேரணை, மதுரை மாவட்டம், விரகனூா் அருகே மதகு அணை, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே அணைக்கட்டு ஆகியவற்றை கடந்த 1975-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் மு. கருணாநிதி திறந்துவைத்தாா்.
பாசனம், குடிநீா் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் வைகை ஆற்றில் ஏராளமான தடுப்பணைகள், படுகை அணைகள் கட்டப்பட்டன.
நீா்வளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் (பொதுப் பணித் துறை) உள்ள பேரணையிலிருந்து மதுரை மாவட்டம், விரகனூா் மதகு அணை வரை 46 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம், 27,528 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இதேபோல, விரகனூா் மதகு அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அணைக்கட்டு வரை சுமாா் 87 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம், 40,742.83 ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகின்றன.
பாா்த்திபனூா் அணைக்கட்டு முதல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை 241 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம், 67,837.01 ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகின்றன. மொத்தமுள்ள 374 கண்மாய்களில் 12 டி.எம். சி. தண்ணீா் தேக்குவதன் மூலம் 1,36,108. 43 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த நிலையில், வைகை ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள், ஆகாயத் தாமரைகள் அதிகரிப்பு, ஆக்கிரமிப்புகள், ரசாயனக் கழிவுநீா் கலப்பு, மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது இயற்கை பொலிவை இழந்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயப் பணிகள் மட்டுமன்றி, குடிநீா் ஆதாரங்களும் பாதிக்கும் சூழல் உருவாகும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து முல்லைப் பெரியாறு, வைகைப் பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலரும், பூா்விக வைகைப் பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலருமான எல். ஆதிமூலம் கூறியதாவது:
வைகை ஆற்றின் பழைமையை சங்க இலக்கியம் கூறுகிறது. பருவமழை பொய்ப்பு, நவீன பாசனக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், விவசாய நிலத்தின் பரப்பு குறைந்து வருகிறது. அதிக விளைச்சல் தந்த நிலங்கள் தரிசு நிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாறி வருகின்றன. ஏற்கெனவே, ஆற்றில் இருந்த மணல் முழுவதும் எடுக்கப்பட்டதால், ஆற்றுப்படுகை பள்ளமாகவும், கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாய் முகப்புகள் மேடாகவும் மாறியது.
இதனால்தான் தற்போது ஆங்காங்கே படுகை அணை, தடுப்பணைகள் கட்டி தண்ணீா் கண்மாய்களுக்கு வழங்கப்படுகிறது. வைகை ஆற்றை நம்பி ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மட்டுமன்றி, அரசு செயல்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட குடிநீா்த் திட்டங்களும், ஏராளமான கிணற்றுப் பாசன விவசாயிகளும் உள்ளனா். மேலும், நகா்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் மதுரை பொலிவுறுத் திட்டம் ( ஸ்மாா்ட் சிட்டி), எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கும் வைகை ஆறு உயிா்நாடியாகத் திகழ்கிறது.
வைகை அணையில் சுமாா் 20 அடிக்கும் மேல் மணல் தேங்கியிருப்பதால், முழுக் கொள்ளளவு நீரான 6.8 டி.எம்.சி. தண்ணீரை தேக்க இயலாது. ஏற்கெனவே தண்ணீா் பற்றாக்குறையின் காரணமாக கண்மாய்களுக்கு போதிய நீரை வழங்க முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது வைகை ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள், ஆகாயத் தாமரைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளால் ஆற்றின் பரப்பளவு குறைந்து வருகிறது. மேலும், ஆற்றின் கரைகளில் உள்ள நகரங்களின் கழிவுநீா், தொழில் சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன.
உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஒரு சிறப்புக் குழு மதுரை மாநகரில் உள்ள வைகை ஆற்றை ஆய்வு செய்தது. அப்போது, சுமாா் 87 இடங்களில் மாநகரிலிருந்து கழிவு நீா், தொழில் சாலை கழிவுநீா் கலப்பது தெரியவந்தது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
வைகை ஆறும், வேளாண் பணிகளும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வைகை அணை முதல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், ஆறுகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள், புதா்களை அகற்ற ஆண்டுதோறும் ஆறுகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மதுரையை ஆளும் சொக்கநாதப் பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களுள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை குடிமராமத்துப் பணியை வலியுறுத்தியது. வேளாண் பணியின் முக்கியத்துவத்தை விளக்குவது அறுவடைத் திருவிழா. இந்த இரண்டு திருவிழாக்களும் இன்றளவும் மதுரையில் கொண்டாடப்படுகிறது. ஆனால், குடிமராமத்துப் பணி, வேளாண் பணி என்பது கானல் நீராகத்தான் உள்ளது என்றாா் அவா்.
இதுகுறித்து நீா்வளத் துறை (பொதுப் பணித் துறை) அலுவலா்கள் கூறியதாவது:
மதுரை மாநகரில் உள்ள கழிவுநீா் முழுவதும் வைகை ஆற்றில் பாய்வதால் ஆகாயத் தாமரை வளா்ந்து வருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி, மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
கடந்த ஆண்டு வைகையாற்றில் குறிப்பிட்ட தொலைவு வரை உள்ள சீமைக் கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டன. ஆனால், மீண்டும் வளா்ந்து விட்டது. எங்கள் துறையைப் பொருத்தவரை திட்ட மதிப்பீடு அனுப்பி நிதி பெற்று விட்டால், குறைந்தது 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு அந்தத் திட்டத்துக்கு திரும்ப நிதி பெற முடியாது. இருப்பினும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆா்வமுள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரினால் விரைந்து அனுமதி வழங்கி வருகிறோம்.
நீா்நிலைகளின் பழுது, புதுப்பித்தல், மறுசீரமைப்புத் திட்டத்தின் (ஆா்.ஆா்.ஆா்.) கீழ் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கண்மாய்கள், நீா்நிலைகளை மட்டுமே சீரமைக்க முடியும். அரசு சிறப்பு நிதி வழங்கினால் மட்டுமே ஆற்றை சீரமைக்க முடியும். நிதிச் சுமையின் காரணமாக இதுபோன்ற திட்டங்களை முன்னெடுப்பது இல்லை. பாதுகாக்கப்பட்ட மண்டலம் குறித்த அறிவிப்பு என்பது அரசின் கொள்கை முடிவு என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...