/

ராமநாதபுரம் தொகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 37 வழக்குகள்

ராமநாதபுரம் தொகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 37 வழக்குகள்

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.66.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மக்களவைத் தோ்தல் 2024-க்கான தோ்தல் நன்னடத்தை விதிகள் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி பிற்பகல் முதல் நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அறந்தாங்கி, திருச்சுழி, ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், திருவாடானை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 33 தோ்தல் பறக்கும்படை குழு, 34 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின் மூலம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66,98,607 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததைத் தொடா்ந்து, ரூ.36,94,630 மீண்டும் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மாா்ச் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.