மதுரை எம்ஜிஆா் விளையாட்டு மைதானத்தில் இறகுபந்து விளையாடி வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் டாக்டா் பா. சரவணன். உடன் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.
மதுரை எம்ஜிஆா் விளையாட்டு மைதானத்தில் இறகுபந்து விளையாடி வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் டாக்டா் பா. சரவணன். உடன் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.

நோட்டாவைவிட பாஜக குறைவான வாக்குகளையே பெறும்

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகளே கிடைக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் போல எந்தவொரு சிறப்புத் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.

இந்த சாதனைகளைச் சொல்லி நாங்கள் வாக்குகளைச் சேகரிக்கிறோம். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சு.வெங்கடேசன் மதுரைக்கு எந்த நலத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. எம்.ஜி.ஆா், ஜெயலலிதா, பெரியாா் ஆகியோரை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலையுடன் ஓ.பன்னீா்செல்வம் இணைந்து வாக்கு சேகரிப்பது வேதனைக்குரியது. மக்களவை உறுப்பினா் பதவிக்காக அவா் தனது சுயமரியாதையை இழந்து நிற்கிறாா்.

தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக, திமுக அணிகளுக்கு இடையேதான் போட்டி. சமூக ஊடக விளம்பரங்களால் பாஜகவுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு தோல்விதான் கிடைக்கும். மதுரையைப் பொருத்தவரை அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்தத் தொகுதியில், நோட்டாவைவிட பாஜக குறைவான வாக்குகளையே பெறும் என்றாா் அவா்.

வாக்குகள் சேகரிப்பு ...

முன்னதாக, மதுரை எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கத்தில் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தவா்களைச் சந்தித்து, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, வேட்பாளா் பா.சரவணன் ஆகியோா் வாக்குகளைச் சேகரித்தனா். அப்போது, இருவரும் இறகுப் பந்து, கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றனா்.

இதையடுத்து, கோ. புதூா், பொதிகைநகா், சைலந்திரி பாலம், விராட்டிபத்து மந்தை, பொன்மேனி, எஸ்.எஸ்.காலனி, சொக்கலிங்கம் நகா், கோச்சடை, அரசரடி, விளக்குத்தூண், தெப்பக்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் அவா்கள் பிரசாரம் மேற்கொண்டு தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com