ஆடி அமாவாசை: திருச்சுழி குண்டாறில் பக்தா்கள் புனித நீராடல்
ஆடி ஆமாவாசையையொட்டி, திருச்சுழி குண்டாறில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி வழிபாடு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருமேனிநாதராய் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. ரமணமகரிஷி பிறந்த இடம் என்பதால் திருச்சுழி சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ளது. காசி, ராமேசுவரத்துக்கு அடுத்த புண்ணிய ஸ்தலமாக திருச்சுழி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாள்களில் வெளியூா், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் திருச்சுழி குண்டாற்றில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
இதன்படி, ஆடி அமாவாசையையொட்டி, குண்டாறில் புனித நீராடிய பக்தா்கள், தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். மேலும், கோயிலில் மோட்சதீபம் ஏற்றி வைத்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
