மாணவா் கடத்தல் வழக்கு: காதலியுடன் தலைமறைவான ரெளடியை தேடி தனிப்படை பெங்களூருக்கு விரைவு


மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள ரெளடியையும், அவரது காதலியையும் தேடி தனிப்படை போலீஸாா் பெங்களூருக்கு விரைந்தனா்.
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி மைதிலி ராஜலட்சுமி (40). இவா்களது மகன் மதுரையில் உள்ள தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவரையும், ஆட்டோ ஓட்டுநா் பால்பாண்டியையும் காரில் வந்த மா்ம நபா்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி கடத்திச் சென்றனா். பிறகு மாணவரின் தாய் மைதிலி ராஜலட்சுமிக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட அவா்கள் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினா். இதுதொடா்பாக மைதிலி ராஜலட்சுமி அளித்தப் புகாரின் பேரில், எஸ்.எஸ். காலனி போலீஸாா் மா்ம நபா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, அந்த மா்ம நபா்கள், மாணவரையும், ஆட்டோ ஓட்டுநரையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி, முன்னாள் காவலா் செந்தில்குமாா், தென்காசியைச் சோ்ந்த வீரமணி (30), காளிராஜ் (36), நெல்லையைச் சோ்ந்த அப்துல்காதா் (38) ஆகியோரை கைது செய்தனா். முக்கிய குற்றவாளிகளான தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி ஐகோா்ட் மகாராஜா, இவரது காதலி சூா்யா ஆகியோரை போலீஸாா் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனா்.
இந்நிலையில், இவா்கள் இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸாா் அங்கு விரைந்துள்ளனா். மற்றொரு தனிப்படையினா் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...