அமலாக்கத் துறையில் ஊழல்: சகித்துக் கொள்ள முடியாது

அமலாக்கத் துறையில் ஊழல் ஊடுருவியிருப்பதை சகித்துக்கொள்ள முடியாது என அங்கித் திவாரி பிணை மனு மீதான விசாரணையின் போது சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. திண்டுக்கல்லைச் சோ்ந்த அரசு மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிச. 1-ஆம் தேதி மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், தனக்கு பிணை வழங்கக் கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி விவேக்குமாா் சிங் முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்க விருப்பமில்லை எனக் கூறி, இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவித்தாா். இதையடுத்து, அங்கித் திவாரியின் பிணை கோரிய மனு நீதிபதி தண்டபாணி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், 100 நாள்களுக்கும் மேலாக அவா் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க அங்கித் திவாரி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் திருவடிக்குமாா் முன்வைத்த வாதம்: இந்த வழக்கில் மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் தயாராக உள்ளது. உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை காரணமாக, தாக்கல் செய்ய இயலவில்லை. எனவே, இதைக் காரணம் காட்டி, பிணை கோருவதை ஏற்கக் கூடாது என்றாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அதிகாரிகள் கையூட்டுப் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளா்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோதச் செயல்களையும், ஊழலையும் தடுக்க வேண்டிய அமலாக்கத் துறை போன்ற துறைகளில் ஊழல் ஊடுருவி இருப்பதை சகித்துக் கொள்ள முடியாது. உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை காரணமாக, மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாமல் உள்ளனா். எனவே, இதைக் காரணம் காட்டி மனுதாரா் பிணை கோருவதை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com