விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமனம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு மேற்கொள்ள 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் பல்வேறு அறைகள் சட்டத்துக்குப் புறம்பாக சிலருக்கு உள்வாடகைக்கு விடப்பட்டது.

இங்கு நிா்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக ரசாயன மூலப்பொருள்களை இருப்பு வைத்திருந்ததுடன், அதிகமான தொழிலாளா்களைக் கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. மேலும், அனுமதிக்கப்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்காமல், மரத்தடியிலும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது போன்ற பல்வேறு விதிமீறல்கள் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இந்தப் பட்டாசு ஆலையானது கடந்த ஓராண்டாக செயல்படாமல் இருந்த நிலையில், அண்மையில்தான் பட்டாசுகள் தயாரிக்க அனுமதியளிக்கப்பட்டது. இந்த விபத்து தொடா்பாக ஆலை உரிமையாளா், மேற்பாா்வையாளா், ஆலையை குத்தகைக்கு எடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஏற்கெனவே விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்த வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த மகேஸ்வரன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

பட்டாசு ஆலைகளில் உள்ள அறைகளை உள்வாடகை, குத்தகைக்கு விடுவோா், கூடுதலாக மூலப்பொருள்களை இருப்பு வைத்திருப்போா், விதிமீறி பட்டாசுகள் தயாரிப்பவா்கள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், சிவகாசி பயிற்சி மையம் மூலமாக நடத்தப்படும் பயிற்சியில் பங்கேற்காத 200 பட்டாசு ஆலைகளின் உரிமையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் இரண்டு மாதங்களுக்குள் பயிற்சி பெற வேண்டும்.

பட்டாசு ஆலைகளில் வைக்கப்படும் அறிவிப்புப் பலகையில் உரிம எண், எந்த வகையான பட்டாசுகள் தயாரிக்க அனுமதி பெறப்பட்டது போன்ற விவரங்களை ஒரு வாரத்துக்குள் எழுத வேண்டும்.

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபடும் ஆலைகளை கண்டறிய நான்கு சிறப்பு நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் பட்டாசு ஆலைகளை முழுமையாக ஆய்வு செய்து, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் ஆலைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனா். இதன்படி, அந்த ஆலைகள் மீது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பட்டாசு ஆலைகளை முறையாக ஆய்வு செய்யாத அலுவலா்கள் மீது ஏற்கெனவே துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது இனி வருங்காலங்களிலும் தொடரும். பட்டாசு ஆலை விதிமீறல் குறித்து 94439 67578 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com