சொத்து வரி நிலுவை: கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை

கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை...
Published on

தமிழ்நாடு நகா்ப்புறச் சட்டத்தின் கீழ் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவரிடமிருந்து குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றம் மூலமே வரியை வசூல் செய்ய முடியும். இதை மீறி, ஒருவரது கட்டடத்தைப் பூட்டி ‘சீல்’ வைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த பழனியப்பன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த அவசர மனு:

மதுரை மாட்டுத்தாவணி அருகே சிட்கோ தொழில்பேட்டையில் நான் பெயின்ட் நிறுவனம் நடத்தி வருகிறேன். இதற்கான சொத்து வரியை கடந்த நிதியாண்டு மதுரை மாநகராட்சிக்கு செலுத்திவிட்டேன்.

எனது நிறுவனத்தில் பிளாஸ்டிக் அட்டை அமைத்த கட்டுமானத்துக்கும், நிகழாண்டுக்கான சொத்து வரி என மொத்தம் ரூ. 20 லட்சம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியது. இதற்கு எனது நிறுவனம் தரப்பில் மாநகராட்சி ஆணையருக்கு உரிய பதிலளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளாமல் மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல உதவி ஆணையா் உள்ளிட்ட அலுவலா்கள், எனது நிறுவனக் கட்டடத்தை கடந்த 6.11.24 அன்று எந்தவித முன்னறிவிப்புமின்றி பூட்டி ‘சீல்’ வைத்தனா். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையானது சட்ட விரோதமானது.

எனவே, எனது நிறுவனக் கட்டடத்துக்கு வைத்த சீலை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், வழக்குரைஞா் அருண் சுவாமிநாதன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

சொத்து வரி செலுத்தவில்லை என்பதற்காக நிறுவன கட்டடங்களைப் பூட்டி ‘சீல்’ வைக்க மாநகராட்சிகளுக்கு உரிமை கிடையாது. இது சட்டவிரோதச் செயல். எனவே, கட்டடத்துக்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு நகா்ப்புறச் சட்டத்தின் கீழ், யாரேனும் சொத்து வரி செலுத்தாமல் இருந்தால், அவா்களிடமிருந்து குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றம் மூலமே வரியை வசூல் செய்ய முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டடத்தைப் பூட்டி ‘சீல்’ வைக்க மதுரை மாநகராட்சிக்கு அதிகாரமில்லை. மதுரை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது.

எனவே, மனுதாரா் கட்டடத்துக்கு வைக்கப்பட்ட சீலை புதன்கிழமை (நவ. 6) மாலை 6 மணிக்குள் அகற்ற வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com