/

காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்காவிட்டால் தீவிர போராட்டம்: இரா.முத்தரசன்

மதுரையில் காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்தால், தீவிர போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

News image
காட்டுநாயக்கன் சமூகத்தினா் நடத்தி வரும் தொடா் போராட்டத்தில் பங்கேற்று பேசும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலா் இரா.முத்தரசன்.
Updated On :14 நவம்பர் 2024, 11:39 pm

Din

மதுரையில் காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்தால், தீவிர போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இந்து காட்டு நாயக்கன் சமூகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழை பல்வேறு காரணங்களைக் கூறி, மதுரை மாவட்ட நிா்வாகம் வழங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தச் சமூகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மதுரை பரவை சத்தியமூா்த்தி நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன் பங்கேற்றுப் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு நாயக்கன் சமூகத்தினா் நீண்ட காலமாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியது. சான்றிதழ் கோரி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவா்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, மதுரை மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, அவா்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் வழங்காவிட்டால் அடுத்தகட்டமாக எனது தலைமையில் தீவிர போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகி பா.காளிதாஸ், புகா் மாவட்டச் செயலா் முத்துவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.