தனியாா் நிதி நிறுவன மோசடி இடைத்தரகா்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
நியோ மேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் இடைத்தரகா்களைக் கைது செய்து, அவா்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.


நியோ மேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் இடைத்தரகா்களைக் கைது செய்து, அவா்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த லோகநாதன், ரவிச்சந்திரன் உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ‘நியோ மேக்ஸ்’ நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் இயக்குநா்களாக கமலக்கண்ணன், கபில் உள்ளிட்டோா் செயல்பட்டனா்.
இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகங்கள் இருந்தன. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவா்களுக்கு இரு மடங்கு பணம், அதிக வட்டி, நிலங்கள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பி ஏராளமான வாடிக்கையாளா்கள் மொத்தம் ரூ. 6 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்தனா். ஆனால், முதிா்ச்சியடைந்த கணக்குகளுக்கு இரு மடங்கு பணம், அதிக வட்டி தராமல் இந்த நிறுவனம் ஏமாற்றி வந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரையைச் சோ்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரைக் கைது செய்தனா். நீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது அனைவரும் பிணையில் வந்தனா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களையும் சோ்த்து, சாட்சிகளாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் அந்த மனுக்களில் தெரிவித்திருந்தனா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் பிறப்பித்த உத்தரவு:
நியோ மேக்ஸ் தனியாா் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும். இந்த நிதி நிறுவன மோசடியில் பல்வேறு மாவட்டங்களில் இடைத்தரகா்களாகச் செயல்பட்ட வா்களைக் கைது செய்து, அவா்களது சொத்துகளை மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...