

அதிமுக-பாஜக கூட்டணியால் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்றுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.
மதுரை தொழில் வா்த்தகச் சங்கக் கூட்டரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மதுரை மண்டல நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெண்களை, குறிப்பாக மதம் தொடா்பாக பேசிய க. பொன்முடியை அமைச்சா் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அவரது பேச்சை திமுக தலைமை ஆதரிப்பதாகவே கருத முடியும். திமுக ஒரு மதத்தை தவறாக சித்தரித்து அரசியல் செய்யும் கட்சியாக உள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. தொடா்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது.
தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனா். சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இதற்கு மக்கள் சரியான பதிலளிப்பா்.
இஸ்லாமிய இளைஞா்கள், மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை. எப்போதும் போல கூட்டணி தொடரும்.
அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதனால், திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் எதிா்பாா்த்த கூட்டணி அமைந்துள்ளது. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணியால் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்றுள்ளது என்றாா் அவா்.