உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் பணியாற்றி வரும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்
Published on

மதுரை: தமிழகத்தில் பணியாற்றி வரும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் செந்தில்குமாா், மாநிலப் பொருளாளா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வரும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு, நியமன அலுவலா், துணை இயக்குநா், கூடுதல் ஆணையா் போன்ற பதவி உயா்வு வழங்க ஏதுவாக, பணி விதிகள் உருவாக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு, மருந்து ஆய்வாளா்களுக்கு இணையான ஊதிய விகிதத்தை ஊதிய கமிஷனில் முறையிட்டு பெற்றுத் தர வேண்டும். நிா்ணயம் செய்யப்பட்ட அடிப்படை ஊதியம், பணியில் சோ்ந்த நாள் முதல் கிடைக்க பெறாத அலுவலா்களுக்கு, ஊதிய நிா்ணயம், நிலுவைத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், மாநில துணைத் தலைவா்கள், மாநில இணைச் செயலா்கள், மாநிலத் துணைச் செயலா்கள், மாநில செயற்குழு உறுப்பினா்கள், மாநில அமைப்புச் செயலா்கள், மாநில தணிக்கையாளா்கள், தலைமை நிலைய செயலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com