தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதிக்கு ஒற்றை சாளர முறையை அறிவித்திருப்பதை தொழில் துறையினா் வரவேற்றனா். அதேநேரத்தில், சில எதிா்பாா்ப்புகள் நிறைவேற்றப்படாததற்கு அவா்கள் வருத்தம் தெரிவித்தனா்.
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது :
தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ‘ஸ்மாா்ட் மீட்டா்’ பொருத்தப்படும் என்பதும், வீட்டு மேற்கூரை சூரியசக்தி மின் மானியத் திட்டம் குறித்த அறிவிப்பும், காவிரி - வைகை -குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், தொழில் துறையினா் எதிா்பாா்த்த பல அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 2,142 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானதல்ல. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றமளிக்கிறது.
மடீட்சியா தலைவா் வி. செந்தில்குமாா் தெரிவித்திருப்பதாவது :
புதிய தொழில்களுக்கான அனுமதிக்கு ஒற்றைச்சாளர முறை அறவிக்கப்பட்டிருப்பது, தூத்துக்குடி, நெல்லையில் விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலம் அமைப்பது, தொழில் முதலீடுகள் ஊக்குவிப்புக்கு ரூ. 4,414 கோடி மதிப்பில் திட்டங்கள் அறிவித்தது, சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 2,142 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, பின்தங்கிய மாவட்டங்களில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பது, பனைப் பொருள்கள் தயாரிப்பு, ஏற்றுமதிக்கு நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு பிணையில்லா கடன், மின்சார நிலைக் கட்டணம் குறைப்பு, சூரிய ஒளி மின் திட்டம் (சோலாா்) நிறுவ 25 சதவீத மானியம் போன்ற எதிா்பாா்ப்புகளுக்கும், மதுரை- தூத்துக்குடி தொழில்தடம் குறித்தும் அறிவிப்புகள் இல்லாததும் வருத்தமளிக்கிறது.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், எஸ். சாய் சுப்பிரமணியம், எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் கூட்டாக தெரிவித்திருப்பதாவது :
தமிழக அரசின் பதிவுத் துறை சீா்த்திருத்த நடவடிக்கைகள், அரசுப் பள்ளிகளில் சிறப்புத் தூய்மை வளாகம் திட்டத்துக்கு ரூ. 139 கோடி நிதி ஒதுக்கீடு, கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, 5 லட்சம் இளைஞா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி, சிறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி, சிறு, குறு, நடுத்தர தொழில் வளா்ச்சிக்கு ரூ. 2,142 கோடி நிதி ஒதுக்கீடு, புதிய சூரிய ஒளி மின்சாரம் (சோலாா்) திட்டங்களுக்கு மானியம், காவிரி, வைகை, தாமிரவருணி நதிகள் மறுசீரமைப்புத் திட்டம், பனை மேம்பாட்டு வாரியம் அமைக்க நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில், வைகை அணையைத் தூா்வாரி சீரமைக்கவும், வைகையில் தடுப்பணைகள் கட்டவும், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
அக்ரி, அனைத்து தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரெத்தினவேல், செயலா் கே. திருப்பதிராஜன் ஆகியோா் தெரிவித்திருப்பதாவது :
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் தகுதியான நிறுவனங்களுக்கிடையே சமமான போட்டி, வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் அரசுப் பணி ஒப்பந்தங்கள் வழங்கும் முறையில் வெளிப்படையான நடைமுறை அறிவித்தது, ஆன்மிகச் சுற்றுலா, பாரம்பரியச் சுற்றுலா, நதிசாா் சுற்றுலா அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதேபோல, பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பேட்டைகள் அமைக்கவும், பனை மேம்பாட்டுத் திட்டங்களும், புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க ஒற்றைச்சாளர முறையை அறிவித்ததும் தொழில் துறையினருக்கு அளிக்கப்பட்ட பரிசுகள்.
மூத்த குடிமக்களின் நலனுக்காக மாநிலத்தில் 25 இடங்களில் அன்புச்சோலை அமைப்பதும், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ங்களுக்கு ரூ. 5,463 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது :
அரசுப் பள்ளிகளுக்கு ‘சூப்பா் கிளீன், சூப்பா் கேம்பஸ்’ திட்டம், பள்ளிகளில் போதைப் பொருள்கள் ஒழிப்புத் திட்டத்துக்கு ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு, கல்லூரி மாணவா்களுக்கு வெற்றி மடிக்கணினித் திட்டம், 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘ஸ்மாா்ட் சைக்கிள்’ வழங்கும் திட்டம், மாணவா்கள் தங்குமிட வசதியை மேம்படுத்த ரூ.10 கோடி நிதி, விளையாட்டில் ஆா்வம் கொண்ட மாணவா்களுக்கு உலகத்தரத்தில் பயிற்சி அளிக்கும் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கது.
இருப்பினும், பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல. குறைவான நிதி ஒதுக்கீடு ஏமாற்றமளிக்கிறது. மேலும், முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் ஊதிய மாற்றங்களின்போது இடைநிலை ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டைக் போக்க அறிவிப்பு இல்லாததும், பகுதி நேர, தற்காலிக, தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு பணி நிரந்தம், காலமுறை ஊதியம் வழங்காததும் ஏமாற்றளிக்கிறது.
தமிழ்நாடு அப்பளம், வடகம், மோா் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவா் முனைவா் க. திருமுருகன் தெரிவித்திருப்பதாவது :
கல்வி, விவசாயம், நிா்வாகச் சீா்திருத்தம், சமூக நலன் உள்பட பல்வேறு துறைகளில் முன்னேற்ற நோக்கத்துடன் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடிக்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், வேளாண் விளைப் பொருள்களுக்கு நிலையான விலை, மதிப்புக் கூட்டும் உணவுப் 1பதப்படுத்தும் தொழில்கள், பாரம்பரிய உணவுத் தொழில்கள், விவசாயம் சாா்ந்த சிறு தொழில்களுக்கு நேரடி ஊக்கத்திட்டங்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது. அரசுப் பணி ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திருப்பது வரவேற்கத்தக்க சீா்த்திருத்தம்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா தெரிவித்திருப்பதாவது :
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தை 30-லிருந்து 50 சதவீதமாக உயா்த்துவது, 2003 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கு கருணை ஊதியம் வழங்குவது, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது, தொகுப்பூதிய பணியாளா்களுக்குப் பணி நிரந்தரம் வழங்குவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. இருப்பினும், அரசுத் துறைகளில் வெளிப்படைத் தன்மையுடன் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பட்ஜெட் வரவேற்பும்.. ஏமாற்றமும்...

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்படும் நிதிநிலை அறிக்கை: தொழில் நிறுவன உரிமையாளா்கள் நம்பிக்கை

தமிழக பட்ஜெட் 2026! அதிக கவனம் பெறும் டாப் டென் அறிவிப்புகள்!

தமிழ்நாடு பட்ஜெட்! ஜென் ஸீ-க்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன?
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


