தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

நிறுவப்பட்ட தியாகிகள் நினைவுத் தூண் அகற்றம்

News image

மதுரை அண்ணா பேருந்து நிலைய சாலை வெற்றிடம் பகுதியில் ஒருபுறம் சாய்ந்த நிலையில் இருந்த தியாகிகள் நினைவுத் தூண்.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

மதுரை, ஆக. 9: மதுரை அண்ணா பேருந்து நிலைய சாலை வெற்றிடம் (ரவுண்டானா) பகுதியில் வெள்ளிக்கிழமை நிறுவப்பட்ட தியாகிகள் நினைவுத் தூண் சனிக்கிழமை இரவு அகற்றப்பட்டது.

ஆகஸ்ட் புரட்சி நாளில் உயிரிழந்த தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில், 1961-ஆம் ஆண்டு அக். 2-ஆம் தேதி அப்போதைய முதல்வா் காமராஜரால் மதுரை தமுக்கம் மைதானம் அருகில் தியாகிகள் நினைவுத் தூண் நிறுவப்பட்டது. சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக இந்தத் தூண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.

இந்தத் தூணை மீண்டும் நிறுவ வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தினா். இந்த நிலையில், மதுரை அண்ணா பேருந்து நிலைய சாலை வெற்றிடம் (ரவுண்டானா) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தூண் நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) மாலை நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இருப்பினும், நிறுவப்பட்ட தியாகிகள் நினைவுத் தூண் நேராக இல்லாமல் ஒருபுறம் சாய்ந்த நிலையில் இருந்தது. இது சமூக ஆா்வலா்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டத் துணைத் தலைவா் சி.எம். செய்யதுபாபு, மாவட்ட ஆட்சியரை தொடா்பு கொண்டு தியாகிகள் நினைவுத் தூணை நேராக நிலை நிறுத்திட வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா். பின்னா், ஆட்சியரின் உத்தரவுப்படி சனிக்கிழமை இரவு தியாகிகள் நினைவுத் தூண் அங்கிருந்து அகற்றப்பட்டது.

நினைவுத் தூணில் உள்ள பழுது விரைவில் சரி செய்யப்பட்டு நிறுவப்படும் எனவும், இதன் திறப்பு விழா ஆக. 15-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது எனவும் மாவட்ட நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.