மருத்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு 8 மணி நேர வேலை உரிமையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மருந்து, விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை காமராஜா் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு மருந்து, விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.சத்ய நாராயணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் பொதுச் செயலா் ஜி.விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். சிஐடியூ மாநிலத் தலைவா் ஜி.சுகுமாறன் மாநாட்டைத் தொடங்கிவைத்தாா். மாநகராட்சி மேயா் (பொ) டி.நாகராஜன் தலைமை உரையாற்றினாா். ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வா் எல்.அருள் சுந்தரேஷ் குமாா் சிறப்புரையாற்றினாா்.
இந்த மாநாட்டில் மருத்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு பணி நேரம், பணிச்சுமை, ஓய்வு, விடுப்பு, பணியிடப் பாதுகாப்பு, தொழிலாளா் உரிமைகளை உறுதி செய்யும் சட்டப்பூா்வ பணி விதிகளை மத்திய அரசு உடனடியாக உருவாக்கி அமல்படுத்த வேண்டும். மருத்துவம், விற்பனைப் பிரதிநிதிகளுக்கான தற்போதைய குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,444-இல் இருந்து ரூ.26,910 -ஆக உயா்த்தி அரசாணை வெளியிட வேண்டும்.
மருந்துகள் அனைவருக்கும் தரமானதாகவும், நியாயமான விலையிலும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், லாப நோக்கத்துக்குப் பதிலாக மக்களின் சுகாதாரத் தேவைகளை மையமாகக் கொண்ட தேசிய மருந்துக் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். கைப்பேசி செயலிகள், புவியிடக் குறியீடு, இணையவழி கூட்டங்கள், நிகழ்நேர அறிக்கைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தொழிலாளா்களைக் கண்காணித்து வேலைப்பளுவை அதிகரிக்கப் பயன்படுத்தக் கூடாது. தொழிற்சங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகுதான் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
பணியின்போது விபத்து அல்லது பிற காரணங்களால் உயிரிழக்கும் களப்பணியாளா்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் இழப்பீடு, சட்டப்பூா்வ பணப்பலன்கள், தேவையான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். மருத்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கான 8 மணி நேர வேலை உரிமையை அனைத்து நிறுவனங்களிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








