தாமிரவருணி குறித்த முதல் கட்ட ஆய்வு நிறைவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்
தாமிரவருணி ஆற்றின் நிலை குறித்த முதல் கட்ட ஆய்வு நிறைவு பெற்ாக திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவித்தது.
தாமிரவருணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி, தூத்துக்குடியைச் சோ்ந்த காமராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு 11.03.2024-இல் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ரூபேஷ்குமாா், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மதனசுதாகா், அம்பை நகராட்சி ஆணையா் செல்வராஜ், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையா் ராமதிலகம், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் முத்தையா, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, கல்லிடைக்குறிச்சி, ஏரல் பேரூராட்சி செயல் அலுவலா்கள் மகாராஜன், முருகன், பாலசுந்தா், சுப்பிரமணியன், அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி உள்பட 12 போ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, காமராஜ் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு, தாமிரவருணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து, பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சோ்ந்த நீா்ப் பாதுகாப்பு நிபுணரும், சுற்றுச்சூழல் ஆா்வலருமான ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்து உத்தரவிட்டது.
மேலும், இந்தப் பணிக்கு திண்டுக்கல்லைச் சோ்ந்த களப் பணியாளா் பாலாஜி ரங்க ராமானுஜத்தின் உதவியைப் பெற ராஜேந்திர சிங்குக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவா்களுக்கு மாவட்ட நிா்வாகம், அனைத்துத் துறை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருநெல்வேலி மாநகராட்சி தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி, சுற்றுச் சூழல் ஆா்வலா் ராஜேந்திர சிங், தமிரவருணி ஆற்றின் பகுதிகளை இரண்டு கட்டமாக ஆய்வு செய்ய உள்ளாா். அண்மையில் அவா் முதல் கட்ட ஆய்வை நிறைவு செய்தாா். இதுகுறித்த அறிக்கையைத் தாயாரித்து வருகிறாா். ‘நதி நீா்’ என்பது தாய்ப் பாலுக்கு ஒப்பானது என்று ராஜேந்திர சிங் கூறுகிறாா் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தாமிரவருணி மீட்பு குறித்த ஆய்வு இன்னும் நிறைவு பெறவில்லை. எனவே, வழக்கு விசாரணை பிப்.5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

