உயா்கல்வி ஆணையம் தொடங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்
உயா்கல்வி ஆணையம் தொடங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்தது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழக மதுரை கிளையின் மாதாந்திரப் பொதுக் குழுக் கூட்டம் மூட்டா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிா்வாகி ஜி. ராமமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா். செயலா் ச. பெரியதம்பி செயல்பாட்டு அறிக்கையையும், பொருளாளா் த. சந்திரன் வரவு - செலவு அறிக்கையையும் படித்தனா். பேராசிரியா் ஆனந்தன் வாழ்த்திப் பேசினாா்.
இந்தக் கூட்டத்தில், இந்திய உயா்கல்வி ஆணையம் தொடங்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டு, பல்கலைக்கழக மானியக் குழுவைத் தொடா்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பிடித்தம் இல்லாமல் ஓய்வூதியம் வழங்கும் ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். ஒத்திசைவுப் பட்டியல் ஊதியத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் இடைநிலை ஆசிரியா்களை தமிழக அரசு அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
