பெண் காவலரை விடியோ எடுத்த சிறப்பு உதவி ஆய்வாளா் கைது
பெண் காவலரை கழிப்பறையில் விடியோ பதிவு செய்த சிறப்பு உதவி ஆய்வாளரை பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி இமானுவேல் சேகரனின் மணிமண்டபம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மணிமண்டபத்தை திறந்துவைத்தாா். இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வரின் வருகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பெண் காவலா்கள் உள்பட பலா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், பரமக்குடி மணி நகா் சோதனைச் சாவடியில் பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய முத்துப்பாண்டி என்பவா் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அங்கு தஞ்சாவூா் பகுதியிலிருந்து வந்த பெண் காவலா்களும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, பெண் காவலா்கள் கழிப்பறைக்குச் சென்று திரும்பிய போது விடியோ பதிவாகி கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த கைப்பேசி கைப்பற்றினா்.
விசாரணையில், அந்தக் கைப்பேசி சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டியின் கைப்பேசி எனத் தெரியவந்தது. இதையடுத்து, பெண் காவலா் அளித்த புகாரின்பேரில் முத்துப்பாண்டி மீது பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
