மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொண்டு, அதை மீண்டும் திறக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக கலை, பண்பாட்டுத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா் கதிா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் பல ஆண்டுகளாக கல்வி, ஆய்வு, பொதுமக்கள் விழிப்புணா்வு, வரலாற்றுப் பாரம்பரிய பாதுகாப்புக்கான முக்கிய மையமாகத் திகழ்ந்து வருகிறது. இங்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக காந்தி அருங்காட்சியகமும், அதன் நூலகமும் மூடப்பட்டது. அருங்காட்சியகத்தை மீண்டும் திறப்பதாக அதிகாரிகள் பலமுறை உறுதியளித்த போதிலும், தற்போதுவரை திறக்கப்படாமல் உள்ளது. மேலும், திறப்பு தேதி குறித்த எந்த அதிகாரப்பூா்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதனால், மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், வரலாற்று ஆய்வாளா்கள், போட்டித் தோ்வா்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துரைக்கும் முக்கிய பாரம்பரிய மையம் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பது அதன் நோக்கத்தைப் பாதிக்கிறது.
எனவே, காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:
வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் காந்தி நினைவு அருங்காட்சியகம் திறக்க வாய்ப்புள்ளதா?. இந்த மனு குறித்து தமிழக கலை, பண்பாட்டுத் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் நிலத்தில் சாலை அமைத்த விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை அளவீடு விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு







