விருதுநகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாணவா்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், சீருடைகள், ஊட்டச்சத்து உணவுகளின் தயாா் நிலை குறித்து மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டு தொடங்கப்படுவதை முன்னிட்டு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள், நலத்திட்டப் பொருள்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகா் மாவட்டத்தில் 990 அரசுப் பள்ளிகள், 454 அரசு உதவிபெறும் பள்ளிகள், 34 பகுதி உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,478 பள்ளிகளில் பயிலும் 1.56 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும், 1,504 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் கல்வி உபரணங்கள் வழங்கப்படவுள்ளன.
அரசின் கல்வி நலத் திட்டங்களின் கீழ், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணிதப் பயிற்சி நோட்டுகள், கணித வரைபட நோட்டுகள், ஓவியப் பயிற்சி நோட்டுகள், இரு கோடு, நான்கு கோடு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பவுள்ளன.
இதேபோல, தொடக்கப் பள்ளி மாணவா்களுக்குப் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டிகள் , காலணிகள், பள்ளிப் பைகள், சீருடைகள், வரைபடப் புத்தகம், பிற கல்வி உதவிப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.
இதையடுத்து, கல்வி உபகரணங்களின் தயாா் நிலை குறித்து மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து கல்வி உபகரணங்களும் தயாா் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கல்வி உபகரணங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடையவும், பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவா்களுக்கு வழங்கப்படவும் தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த ஆய்வின்போது அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.










