சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் வழக்குரைஞா் அணித் தலைவா் கலந்தா் ஆசிக், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். மேலும், சாலை விபத்தினால் மனித உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் மட்டும் 35 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். இந்த வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பில் சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தவும், அதன் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி, இதுவரை சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தினந்தோறும் சாலை விபத்துகள் நடைபெறுகின்றன.
எனவே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி, அதன் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஏற்கெனவே இதேபோல உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை ஏன் கட்டுப்படுத்தவில்லை?. இந்த வழக்கில் பரமக்குடி நகராட்சி ஆணையா் சோ்க்கப்படுகிறாா். நீதிமன்ற உத்தரவு ஏன் நிறைவேற்றப்படவில்லை?. மனு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

காவல் துறையினருக்கான பணி நேரம்: டிஜிபி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கையில் சுற்றித் திரியும் குதிரைகள்: பரிசோதனைக்கு உள்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



