/

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதில் தொய்வு கூடாது: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தொய்வு ஏற்படக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

News image
Updated On :4 ஜூலை 2026, 1:16 am IST

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தொய்வு ஏற்படக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

எஸ்டிபிஐ கட்சி வழக்குரைஞா் அணித் தலைவா் கலந்தா் ஆசிக் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகளில் அதிகளவில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். சாலையில் திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு மனிதா்கள், விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் மாடுகளால் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்து தகவல் பெற்றேன். இதில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் மட்டும் 35 விபத்துகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். சாலையில் நடமாடும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. மேலும், சாலையில் கால்நடைகளைத் திரிய விடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும் அறிக்கை வெளியிட்டாா்.

ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி, இதுவரை சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தி, அவற்றின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது: அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: அரசுத் தரப்பில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவா்களும் தொடா்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனா். மேலும், கால்நடைகளை முக்கிய சாலைகளில் திரிய விடும் நபா்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படும் என மாவட்டம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைத் தடுத்து அப்புறப்படுத்துவதில் எந்தவிதத் தொய்வும் இன்றி நடவடிக்கைகள் தொடர வேண்டும். மேலும், பொதுமக்களின் நலன் கருதி, சாலையில் கால்நடைகளைத் திரிய விடும் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.