குற்றாலம் கோயில் கடைகள் ஏலம்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு
குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றாலநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான கடைகளை பொது ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்
குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றாலநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான கடைகளை பொது ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றாலநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான கடைகளை ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அந்தக் கோயில் உதவி ஆணையா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை தூத்துக்குடி மாவட்ட இணை ஆணையா் நேரில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையில், திருக்குற்றாலநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளா்களின் எண்ணிக்கை, அவா்களின் பெயா்கள், ஆக்கிரமிப்பின் அளவுகள் குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.
மேலும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது இந்து சமய அறநிலையச் சட்டப் பிரிவின் கீழ் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலை அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் இடம்பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கடந்த 2023-ஆம் ஆண்டு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலையொட்டிய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கோயில் சுவா் அருகே கடைகள் வைக்க தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

