
கொள்ளிடம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு: விசாரணை அக். 13-க்கு ஒத்திவைப்பு
திருச்சி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
திருச்சி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திருச்சியைச் சோ்ந்த வளா்மதி தாக்கல் செய்த மனு:
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளித்திருமுத்தம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி, அதைச் சுற்றியுள்ள அரசு நிலங்களை தனிநபா்கள் சிலா் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனா். இதனால், குடியிருப்பு, பிற இடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கொள்ளிடம் ஆற்றில் கலக்கப்படுகிறது. மேலும், நெகிழி, திடக்கழிவுகள் ஆற்றுப்படுகையில் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆற்றின் கரைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், இரவு நேரங்களில் இந்த ஆக்கிரமிப்புப் பகுதிகளில் மது அருந்துதல், பொதுமக்களிடம் தகராறு செய்தல், கைப்பேசி, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பதால், அந்த வழியாகச் செல்லும் பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதுதொடா்பாக கடந்த 26.7.2026 -அன்று திருச்சி மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீா் கலப்பது, குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆற்றுப் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளைஅகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீா்நிலைகள், அரசின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளா்களை எதிா்மனுதாரா்களாகச் சோ்க்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





