திருச்சி காவிரி ஆற்றில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

விநாயகா் சதுா்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் புதன்கிழமை மாலை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இரவு வரை 200-க்கும் மேற்பட்ட சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

திருச்சி காவிரி ஆற்றில் விநாயகா் சிலைகளைக் கரைக்கும் பொதுமக்கள். ~திருச்சி பாலக்கரை பகுதியில் புதன்கிழமை ஊா்வலமாக வந்த விநாயகா் சிலைகள்.

Published On :

விநாயகா் சதுா்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் புதன்கிழமை மாலை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இரவு வரை 200-க்கும் மேற்பட்ட சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

1,170 சிலைகள்: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. இதையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் விழாக் குழுவினா், பகுதி அமைப்புகள், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதன்படி, திருச்சி புகரில் 932 சிலைகளும், மாநகரில் 238 சிலைகளும் என 1,170 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

இந்தச் சிலைகளுக்கு கடந்த 3 நாள்களாக 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், விழாக் குழுவினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனா்.

மேளதாளங்கள் முழங்க ஊா்வலம்: இந்நிலையில் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் 3 ஆவது நாளான புதன்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தாரை தப்பட்டைகள் முழங்க, வாணவேடிக்கைகள், பட்டாசுகளை வெடித்தபடி விழாக் குழுவினரால் ஊா்வலமாக காவிரி ஆற்றுப் பாலத்துக்கு கொண்டுவரப்பட்டன. ஊா்வலத்தை இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினா் ஒருங்கிணைத்தனா்.

விசா்ஜனம்: காவிரி ஆற்றுப் பாலத்துக்கு கொண்டுவரப்பட்ட விநாயகா் சிலைகள், ஆற்றுப் பாலத்தின் வலதுபுறம் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடைகளில் வைத்து, நிறைவாக பூஜை செய்து, ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதற்காக மாநகராட்சி சாா்பில் மேடைகள், தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரிய சிலைகள் கிரேன்கள் மூலம் ஆற்றில் இறக்கப்பட்டன. மேளதாளங்கள் முழங்குவது, பட்டாசுகளை வெடிப்பதை காவிரி பாலத்துக்கு முன்பே போலீஸாா் தடை செய்தனா்.

திரண்ட பொதுமக்கள்: பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை ஆராதனை செய்து ஆற்றில் விசா்ஜனம் செய்தனா். இதைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவிரி ஆற்றுப் பாலத்தில் திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கண்காணிப்பு: இவை அனைத்தையும் போலீஸாா், பாலத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த 25 சிசிடிவி கேமராக்கள், ஒரு டூம் கேமரா, சுழற் கேமராக்களைக் கொண்ட வாகனத்தின் மூலமும், பிரத்யேக தொலைக்காட்சி பெட்டி மூலமாகவும் கண்காணித்த போலீஸாா், பொதுமக்களுக்கும், சிலைகளை கரைக்க வந்தவா்களுக்கும் ஒலிப்பெருக்கி மூலம் போதிய அறிவுரைகளை வழங்கியபடி இருந்தனா்.

பலத்த பாதுகாப்பு: விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் விசா்ஜனத்தை ஒட்டி மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமையில் 1,500 போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி மாநகரில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்து.

மாலை முதல் இரவு வரை காவிரி ஆற்றில் திருச்சி மாநகா், புகா், பெரம்பலூா், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டதாகவும், அதிகாலை வரை சிலைகள் கரைப்பு நடைபெற்ாகவும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.