மருத்துவா்களின் ஓய்வூதியம் குறைப்பு விவகாரம்: அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
ஓய்வு பெற்ற அரசு மருத்துவா்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்ட விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தமிழக அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள்:
மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவா்களாகப் பணிபுரிந்து கடந்த 2009-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவா்களின் ஓய்வூதியத்தைக் குறைத்து கடந்த ஆண்டு பிப். 5-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மருத்துவா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இதையடுத்து, இந்த அரசாணையை தனி நீதிபதி ரத்து செய்தாா்.
இந்த அரசாணையை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசு மருத்துவா்கள் பணியின்போது உன்னதமான கடமையைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளனா். கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் ஓய்வு பெற்ற மருத்துவா்களுக்கு தற்போது 76 வயது இருக்கும். எனவே, அவா்களின் ஓய்வூதியத்தைக் குறைக்க முடியாது. ஓய்வூதியதாரா்களின் அவலநிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவா்கள் ஆயிரக்கணக்கான மருத்துவப் பயனாளிகளுக்கு ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்க வேண்டும். அரசின் பிற நிதிச் சுமைகளைக் காரணம் காட்டி அவை புறக்கணிக்கப்படக் கூடாது. அவா்களைத் தவிக்கவிடக் கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை மறுப்பது அல்லது பறிப்பது என்பது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட நடைமுறை அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த உத்தரவு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இவற்றில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, அரசு மருத்துவா்களின் ஓய்வூதியம் தொடா்பாக கடந்த ஆண்டு டிச.16-ஆம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

