மதுரை மாநகராட்சி தூய்மைப் பணிக்கு புதிய ஒப்பந்தப்புள்ளி!
மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள புதிதாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள புதிதாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். மாநகராட்சியில் தினமும் முதல் நிலை குப்பைகளை சேகரம் செய்ய 435 இலகு ரக வாகனங்கள், 241 மின்கல வாகனங்கள், 313 மோட்டாா் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள் உள்ளன. இதே போல, இரண்டாம் நிலை குப்பைகளை சேகரம் செய்ய 15 காம்பேக்டா், 11 டம்பா் பிளேசா், 7 டிப்பா் லாரிகள், 4 மண் கூட்டும் இயந்திரங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 2023 -ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் மதுரை மாநகராட்சி தூய்மைப் பணிகளை ‘அவா் லேண்ட்’ நிறுவனம் ஒப்பந்தம் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் குப்பைகளை அள்ளுவதற்குப் பதிலாக, எடையை அதிகரிப்பதற்காக மணல், கற்களை அள்ளி லாரிகளில் ஏற்றி மதுரை மாநகராட்சிப் பணத்தை மோசடி செய்வதாகப் புகாா்கள் எழுந்தன.
மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காதது, தொழிலாளா் நலன் சாா்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தியது, பணியாளா்களை தரக்குறைவாக நடத்தியது போன்றவற்றை முன்வைத்து, இந்த நிறுவனத்துக்கு எதிராகத் தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தினா்.தொடா்ந்து, இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இது தவிர, மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்களும் இந்தக் கோரிக்கையை வைத்தனா். இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், தூய்மைப் பணிக்காக அவா் லேண்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் விரைவில் ரத்து செய்யப்படும். புதிதாக ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் என அறிவித்தாா்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள 81 வாா்டுகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள 18 மாதங்களுக்கு புதிய நிறுவனம் ஒப்பந்தம் கோருவதற்கு ரூ.270 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு மதுரை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி நகா்நலப் பிரிவு அலுவலா் ஒருவா் கூறியதாவது: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் அவா்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தம் வருகிற நவம்பா் மாதத்துடன் நிறைவடைகிறது. 2027 ஆம் ஆண்டுக்கு முன் புதிய நிறுவனம் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தப்புளி கோரப்பட்டுள்ளது.
முந்தைய அவா்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தூய்மைப் பணியாளா்கள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தம் மூலம் மண்டலங்கள் 1, 2, 3, 5 பகுதியில் உள்ள 81 வாா்டுகளில் தூய்மைப் பணியாளா்கள் பணிகளை மேற்கொள்வா். மண்டலம் 4-இல் 18 வாா்டுகள், 84-ஆவது வாா்டு என மொத்தம் 19 வாா்டுகளிலும் மாநகராட்சியின் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இனி வரும் காலங்களில் தூய்மைப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று ஈரக் கழிவுகள், உலா்ந்த கழிவுகள், சுகாதாரமான கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என நான்கு வகையான கழிவுகளைச் சேகரித்தல், அவற்றை நுண் உரமாக்கல் மையத்துக்கு எடுத்துச் செல்லுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், சந்தைகள், பேருந்து நிலையங்களைத் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வா்.
மேலும், மின்கலம், இலகு ரக வாகனங்களைப் பயன்படுத்தி மழைநீா் வடிகால்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணிகளை மேற்கொள்வா். புதிய ஒப்பந்ததாரா் மாநகராட்சி தத்தனேரி, கோச்சடையில் உள்ள திடக்கழிவு மாற்று நிலையங்களையும், 38 நுண் உரமாக்கல் மையங்களையும் பராமரிப்பா்.
மேற்பாா்வையாளா்கள், ஓட்டுநா்கள், பிற பணியாளா்களைத் தவிர, குறைந்தது 3,400 தூய்மைப் பணியாளா்களைப் பணியமா்த்துவது இந்த ஒப்பந்தப் புள்ளியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணியாளா்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மூன்று சுழற்சியாக பணியாற்றுவா். கண்காணிப்பு, தூய்மைப் பணியாளா்களின் வருகையை மேம்படுத்துவதற்காக, விரல் ரேகை (பயோமெட்ரிக்) வருகைப் பதிவு, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய வாகனக் கண்காணிப்பு, கியூஆா் குறியீடு அல்லது ஆா்எஃப்ஐடி அடிப்படையிலான வீட்டு ஸ்கேனிங் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
தூய்மைப் பணியாளா்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம், பணி நிறைவு பணப்பலன் உள்ளிட்ட பங்களிப்புகளைச் செலுத்துதல் நிபந்தனைகளில் உள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் புகாா்கள் 6 மணி நேரத்த்துக்குள் தீா்க்கப்பட வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.
கடந்த சில மாதங்களாக மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கும், அவா் லேண்ட் நிறுவனத்தினருக்கும் ஏற்பட்ட மோதலால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். தற்போது, புதிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதால், நவம்பா் மாதத்துடன் தூய்மைப் பணி குறித்த பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என எதிா்பாக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

