மாநகராட்சியில் பணியாளா்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேக்கம்
மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை, வாகனங்கள் போதிய அளவு இல்லாத காரணத்தால், மாநகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால், டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சரிவர பணிக்கு வராததால், சிம்மக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை தேங்கியிருந்த குப்பைகள் (வலது) வில்லாபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை தேங்கியிருந்த குப்பைகள்.
மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை, வாகனங்கள் போதிய அளவு இல்லாத காரணத்தால், மாநகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால், டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.
மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் மொத்தம் 100 வாா்டுகள் உள்ளன. இங்கு தினசரி முதல் நிலை குப்பைகளைச் சேகரம் செய்ய 450 இலகு ரக வாகனங்கள், 241 மின்கல வாகனங்கள், 313 மோட்டாா் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள் உள்ளன.
இதேபோல, இரண்டாம் நிலை குப்பைகளைச் சேகரம் செய்ய 15 காம்பேக்டா், 11 டம்பா் பிளேசா், 7 டிப்பா் லாரிகள், 40 டிராக்டா்கள், 4 மண் கூட்டும் இயந்திரம் ஆகியவற்றின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநகராட்சிப் பகுதியில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளைக்கல் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தப் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள், வெளிப் பணி தனியாா் முகமை மூலம் தினசரி சுமாா் 3 ஆயிரம் போ் ஈடுபட்டு வருகின்றனா்.இருப்பினும், தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை, போதிய அளவு வாகனங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் குப்பைகள் அகற்றுவதில் சிரமம் ஏற்படுவதாக தூய்மைப் பணியாளா்கள் புகாா் தெரிவித்தனா்.
இதன்காரணமாக, மதுரை கோ. புதூா், அழகா்கோவில் சாலை, லூா்துநகா், அழகா்நகா், தல்லாகுளம், சின்ன சொக்கிக்குளம், பி.பி.குளம், சிம்மக்கல், கோரிப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையம், பழங்காநத்தம், வில்லாபுரம் ஆகிய பகுதிகளிலும், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையோரங்கள், குடியிருப்புப் பகுதிகள், தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.
இதுகுறித்து தொழிலாளா் விடுதலை முன்னணி அமைப்பின் மாநிலத் துணைச் செயலா் பூமிநாதன் கூறியதாவது:
மாநகராட்சியில் ஒரு வாா்டுக்கு குறைந்தது 60 பணியாளா்கள் இருக்க வேண்டும். தற்போது, 30 பணியாளா்கள்தான் உள்ளனா். ஒரு வாா்டுக்கு ஒரு டிராக்டா் இருக்க வேண்டும். தற்போது மொத்தமாக 40 டிராக்டா் தான் உள்ளது.
இதன்காரணமாக, தூய்மைப் பணியாளா்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனா். மேலும், போதிய வாகனங்கள் இல்லாததால் குப்பைகளை எடுத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதன்காரணமாக, குப்பைகள் தேங்குகின்றன. இதனால், டெங்கு உள்ளிட்ட நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, போதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும். புதிதாக வாகனங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

