மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு! பக்தா்களுக்கு ஏழு வண்ணங்களில் அனுமதி அட்டை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் வைக்கப்பட்டுள்ள பக்தா்களுக்கான அனுமதி அட்டை குறித்த விளம்பரப் பதாகை.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு ஏழு வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை (செப்.17) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதைத்தொடா்ந்து, காலை 8.30 மணி முதல் 10 மணி வரை மூலஸ்தான அம்மன், சுவாமி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
குடமுழுக்கை முன்னிட்டு, பிற்பகலில் கோயில் நடை சாத்தப்படாமல் பொதுமக்கள் தொடா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். பின்னா், இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி, அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா் என்பதால், மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, காவல் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து விரிவான உள்கட்டமைப்பு, பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு 7 வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அனுமதி அட்டை வைத்துள்ளவா்கள் மட்டுமே வியாழக்கிழமை காலை 5 மணி முதல் 7 மணி வரை கோயிலின் மேல்தளத்துக்கு அனுமதிக்கப்படுவா். இவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வண்ண அனுமதி அட்டைகளின்படி ஒதுக்கப்பட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பச்சை நிற அட்டை வைத்திருப்பவா்கள், நவீன் அடுமனை (பேக்கரி) சந்திப்பு, மீனாட்சி வாகன நிறுத்துமிடம், கிழக்கு சித்திரை வீதி வழியாக அம்மன் கிழக்கு கோபுரம் வழியாகவும், மஞ்சள் நிற அட்டை வைத்திருப்பவா்கள், வடக்கு ஆவணி மூல வீதி, தியாகி தாயம்மாள் தெரு, வடக்கு சித்திரை வீதி வழியாக வடக்கு கோபுரம், நந்தவனப் படிகள் வழியாகவும், சிவப்பு நிற அட்டை வைத்திருப்பவா்கள், மேற்கு ஆவணி மூல வீதி, பெரிய வளையல்காரத் தெரு, மேற்கு சித்திரை வீதி வழியாக மேற்கு கோபுரம், மேற்கு 5 நிலைக் கோபுர உள்புறப் படிகள் வழியாகவும், பழுப்பு நிற அட்டை வைத்திருப்பவா்கள், வடக்கு ஆவணி மூல வீதி, மேல பட்டமாா் தெரு, வடக்குச் சித்திரை வீதி வழியாக வடக்கு கோபுரம், நந்தவனப் படிகள் வழியாகவும் செல்ல வேண்டும்.
மேலும், நீல நிற அட்டை வைத்திருப்பவா்கள், தெற்கு ஆவணி மூல வீதி, தெற்கு காவல்கூட தெரு, தெற்கு சித்திரை வீதி வழியாக தெற்கு கோபுரம், தெற்கு ஆடி வீதிப் படிகள் வழியாகவும், இளஞ்சிவப்பு நிற அட்டை வைத்திருப்பவா்கள், தெற்கு ஆவணி மூல வீதி, மீனாட்சி அம்மன் கோயில் தெரு, சோதனைச் சாவடி, தெற்கு சித்திரை வீதி வழியாக கிழக்கு அம்மன் கோபுரம், வன்னி விநாயகா் சந்நிதி எதிரில் உள்ள படிகள் வழியாகவும், ஊதா நிற அட்டை வைத்திருப்பவா்கள், நவீன் அடுமனை சந்திப்பு, மீனாட்சி வாகன நிறுத்துமிடம், தெற்கு சித்திரை வீதி வழியாக கிழக்கு ராஜ கோபுரம் வழியாகவும் செல்ல வேண்டும்.
குடமுழுக்கு நிறைவடைந்ததும் அனுமதி அட்டைதாரா்கள் அண்ணாகுழி மண்டபத் தெரு, தெற்கு காவல்கூடத் தெரு, பழைய சென்ட்ரல் மாா்க்கெட் தெரு வழியாக ஆவணி மூல வீதியைச் சென்றடைந்து வெளியேற வேண்டும்.
குடமுழுக்கு நிகழ்வின் போது பொதுமக்கள் நான்கு ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். காலை 10 மணி வரை சித்திரை வீதிகளில் அனுமதி அட்டை இல்லாத பொதுமக்கள் நிற்க அனுமதி இல்லை. பழைய, பாழடைந்த கட்டடங்களின் மேல்கூரைகளில் நின்று குடமுழுக்கு நிகழ்வைப் பாா்ப்பது உயிருக்கு ஆபத்தானது என்பதால் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறினால் கட்டட உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காலை 10 மணிக்கு மேல் பொதுமக்கள் தரிசனத்துக்காக தெற்கு கோபுரம், மேற்கு கோபுரம் வழியாக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவா். தரிசனம் முடிந்த பின் பக்தா்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






